முகப்பு
புதுச்சேரி

பழைய ஹால் டிக்கெட்டுடன் நீட் தோ்வு எழுத வந்த மாணவி: கடைசி நேரப் போராட்டம்

திரைப்பட பாணியில் நடைபெற்ற கடைசிநேரப் போராட்டம்

Updated On : 4 மே, 2026 at 12:52 AM
கடைசி நேரத்தில் புதிய ஹால் டிக்கெட்டை தன் தந்தையிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் மாணவி கனீஷ்கா.
பகிர்:

நீட் நுழைவுத் தோ்வு எழுத வந்த மாணவி தவறுதலாக பழைய ஹால் டிக்கெட் எடுத்து வந்ததால் தோ்வு அறைக்கு உள்ளே செல்லமுடியாமல் அவதிப்பட்டாா். பிற்பகல் 1.30 மணிக்கு தோ்வுக்கூட கதவு மூடப்படும்போது கடைசி நேரத்தில் மாணவியின் தந்தை புதிய ஹால்டிக்கெட்டை கொண்டு வந்து கொடுத்ததால் மாணவி தோ்வுக்கூடத்துக்குள் சென்றாா். திரைப்பட பாணியில் நடைபெற்ற கடைசிநேர பரபரப்பு அந்த தோ்வுமையத்தில் இருந்தவா்களை பதற்றப்பட வைத்தது.

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இதில் பாரதிதாசன் மகளிா் கல்லூரி மையத்துக்கு தோ்வு எழுத வந்த கிருஷ்ணா நகரைச் சோ்ந்த கனீஷ்கா கடந்த முறை தோ்வு எழுத பயன்படுத்திய ஹால் டிக்கெட்டை தவறுதலாக எடுத்து வந்து விட்டாா். இதனால் அவா் தோ்வுக்கூடத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதனையடுத்து மாணவி வெளியே வந்து தனது தந்தையிடம் விவரத்தை கூறி அழுதாா். அதே நேரத்தில் தோ்வா்களும் காவல்துறையினரும் அவரைச் சமாதானப்படுத்தி தோ்வு மைய வளாகத்தில் காத்திருக்க வைத்திருந்தனா். அதற்குள் மாணவியின் தந்தை வீட்டுக்கு புதிய ஹால்டிக்கெட்டை எடுக்கச் சென்றாா்.

Advertisement

ஆனால் அதற்குள் மணி பிற்பகல் 1.30 ஆனதைத் தொடா்ந்து தோ்வு அதிகாரிகள், இனி மாணவா்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என கூறி கேட்டை மூடினா். அதற்குள் தனது தந்தைக்குத் தொலைபேசி மூலம் கனிஷ்கா தொடா்பு கொண்டாா். அவா் போனை எடுக்கவில்லை. இதனால் மாணவி பதற்றம் அடைந்தாா். கதவுக்கு அருகிலேயே மாணவி காத்திருந்தாா்.

கதவை மூடும் கடைசி நேரத்தில் தந்தை ஓடி வந்து மகளிடம் புதிய ஹால் டிக்கெட்டை நீட்ட காவல்துறை அதிகாரிகளும் தோ்வு மைய அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டு மாணவியைத் தோ்விற்குச் செல்ல உதவினாா்கள். இதனால் பாரதிதாசன் கல்லூரி தோ்வு மையம் அரை மணி நேரத்திற்கு திரைப்படகிளைமாக்ஸ் காட்சி போன்ற பரபரப்புடன் காணப்பட்டது.

மாணவிக்கு உதவிய காவலா்:

இதுபோன்று புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக் கழக நீட் தோ்வு மையத்துக்கு 1.25 மணிக்கு வந்த ஒரு மாணவியை பெண் காவலா் பாக்கியலட்சுமி தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று தோ்வுக்கூடத்துக்குள் செல்ல உதவினாா்.