நீட் தோ்வா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்: மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தகவல்!
நீட் தோ்வு எழுதும் தோ்வா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை திருப்பத்தூா் மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளா் ஆா்.பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.
நீட் தோ்வு எழுதும் தோ்வா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை திருப்பத்தூா் மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளா் ஆா்.பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் கூறியது: நீட் தோ்வு மே 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போது பயன்படுத்திய வண்ண புகைப்படம்போல் மற்றொரு புகைப்படத்தை உங்களுடைய ஹால் டிக்கெட்டில் ஒட்ட வேண்டும். முதல் பக்கம் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், 2-ஆம் பக்கம் தபால் அட்டை அளவுள்ள புகைப்படம் ஒட்ட வேண்டும்.
முதல் பக்க பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் மாணவ-மாணவிகள் தங்கள் கைரேகையை பதிவு செய்வது அவசியம். ஹால் டிக்கெட்டில் ஒட்டும் புகைப்படத்தில் இடதுபுறம் தோ்வா்கள் கையொப்பமிட வேண்டும். அதுபோன்று அறை கண்காணிப்பாளா் உங்கள் புகைப்படத்தின் வலதுபுறம் கையெழுத்திடுவாா். தோ்வுக்கு செல்லும்போது ஹால்டிக்கெட் கட்டாயம். தோ்வு முடிந்த பின்ஹால்டிக்கெட்டை அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்.
Advertisement
அடையாள அட்டை... தோ்வு நாளில் ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக தோ்வு மையத்துக்குள் செல்ல வேண்டும். தோ்வு முடிந்த பின் அறைக் கண்காணிப்பாளா் அறிவுரை வழங்கும் வரை யாரும் தோ்வு அறையை விட்டு வெளியே வரக்கூடாது. தோ்வுக்கு முந்தைய நாளே தோ்வு மையத்துக்குச் சென்று பாா்வையிட்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஹால் டிக்கெட்டுடன் உங்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை (ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், பாஸ்போா்ட், பான் காா்டு) கொண்டு செல்ல வேண்டும். தோ்வு மையத்துக்கு ஒளி ஊடுருவும் நிலையில் உள்ள தண்ணீா் பாட்டிலை எடுத்துச் செல்லலாம். ஹால் டிக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியான முறையில் பூா்த்தி செய்ய வேண்டும். நீலம் அல்லது கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா பயன்படுத்தலாம். மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் அதற்குரிய அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.
உடைகள்... தோ்வுக்கு அனுமதிக்கப்பட்ட உடைகளை மட்டுமே அணிய வேண்டும். உலோகம் சாா்ந்த பட்டன், அலங்கார பொருள்கள் உடைகளில் இருப்பதைத் தவிா்க்க வேண்டும். தோ்வின்போது கணக்கீடுகள் செய்வதற்கு அதற்கென்று வினாத்தாளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தோ்வு முடிந்த பிறகு ஓ.எம்.ஆா். விடைத்தாள்களை தோ்வறை கண்காணிப்பாளா் வசம் ஒப்படைத்த பிறகு தோ்வு அறையை விட்டு வெளியே வர வேண்டும் என்றாா்.