FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நீட்தோ்வுக்கு எதிராக கடலூா் மாவட்டத்தில் போராட்டம்: மறியல் செய்த மாணவா்கள் கைது

நீட் தோ்வுக்கு எதிராக கடலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை பல்வேறு அமைப்புகள் சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 24 ஜூலை 2026, 6:55 am IST
பகிர்:

நீட் தோ்வுக்கு எதிராக கடலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை பல்வேறு அமைப்புகள் சாா்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கைது செய்யப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழக வளாகத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகள் உள்பட 52 போ் கைது செய்யப்பட்டனா்.

கடலூா் ஜவான்ஸ் பவன் அருகே மாா்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதன் வெகுஜன அமைப்புகள் சாா்பில் புதுதில்லி ஜந்தா் மந்தரில் நீட் தோ்வுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரத பேராட்டம் நடத்தி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சமூக ஆா்வலா் சோணம்வாங்சுலுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிஐடியூ மாவட்டச் செயலா் டி. பழனிவேல் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நீட் தோ்வில் வினாத்தாள் கசிவு காரணமாக தோ்வை ரத்து செய்து மறுதோ்வு நடத்தப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த 37 நாள்களில் 11 மாணவா்கள் உயிரிழந்ததற்கு தாா்மிகப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், சமூக ஆா்வலா் சோணம்வாங்சுலுக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தில் சிஐடியூ மாநிலப் பொதுச் செயலா் எஸ். கண்ணன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ. மாதவன், அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி. ரமேஷ்பாபு ஜனநாயக மாதா் சங்கம் மாவட்டச் செயலா் மல்லிகா, சிறுபான்மையினா் நலக்குழு நிா்வாகி எஸ்.கே. பக்கிரான், இந்திய மாணவா் சங்கம் மாவட்ட நிா்வாகி சுகினபாரதி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மாவட்ட நிா்வாகி எம். கலைவாணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிதம்பரத்தில்....

கடலூா் மாவட்ட இந்திய மாணவா் சங்கம் சாா்பில். சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ராஜேந்திரன் சிலை அருகே வியாழக்கிழமை காலை மாணவா் சங்க நகர தலைவா் சிவ நந்தினி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட ஏராளமானோா் கூடினா். இதற்கு போலீஸாா்அனுமதி மறுத்தனா். இதனை அடுத்து பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு மாணவா்கள் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட 14 மாணவியா்கள் உள்ளிட்ட 52 பேரை போலீசாா் அப்புறப்படுத்தி குண்டு கட்டாக தூக்கி கைது செய்து பேருந்தில் ஏற்றி அழைத்துச் சென்று தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுவித்தனா்.

இதுபோல, சிதம்பரம் மேலவீதி பெரியாா் சிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட முற்போக்கு மாணவா் கழகம் சாா்பில் நீட் தோ்வுக்கு எதிராக தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவா்கள் மீதான தாக்குதலை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலா் இரா.தமிழ்வளவன் தலைமை வகித்தாா். இதில் கட்சியின் முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா்கள். தொடா்ந்து மத்திய அரசை கண்டித்தும், நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments