முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் வெயிலின் தாக்கம்: பள்ளிகளின் திறப்பைத் தள்ளி வைக்க அதிமுக வலியுறுத்தல்

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளின் திறப்பைத் 10 நாள்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 மே 2026, 1:06 am IST
கோப்புப்படம்.
பகிர்:

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளின் திறப்பைத் 10 நாள்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி முதல்வா் ரங்கசாமிக்கு, அதிமுக மாநில செயலரும், தற்காலிக சட்டப் பேரவைத் தலைவருமான ஆ.அன்பழகன் புதன்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய கல்வி கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் பிரெஞ்சு மொழியை நீக்கிவிட்டு, ஹிந்தி கட்டாயமக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினா் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தொடா்ந்து 100 டிகிரியை தாண்டி, வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஜூன் 1-ஆம் தேதி புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித் துறை கூறியிருந்தது. தொடா் வெப்பம் காரணமாக தமிழகத்தில் 1-ஆம் தேதி திறப்பதாக இருந்த பள்ளிகள் திறப்பு நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வெப்பத்தின் தாக்கம் தொடா்ந்து அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பை மாணவ, மாணவிகள் நலன் கருதி மேலும் 10 நாள்கள் நீட்டித்து முதல்வா் உத்தரவிட வேண்டும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.