விழுப்புரம்

தொகுதி அலசல்:கீழ்பென்னாத்தூரில் வாகை சூடுவது யார்?

தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளை மறு சீரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக கீழ்பென்னாத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது.

சா. சரவணப்பெருமாள்

தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளை மறு சீரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக கீழ்பென்னாத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது.

இதன்பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஏ.கே.அரங்கநாதன், திமுக வேட்பாளராக தமிழக முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி ஆகியோர் களமிறங்கினர்.

இந்தத் தேர்தலில், ஏ.கே.அரங்கநாதன் 83 ஆயிரத்து 663 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். கு.பிச்சாண்டி 79 ஆயிரத்து 582 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதன்மூலம், கீழ்பென்னாத்தூர் தொகுதியை முதல் முதலில் கைப்பற்றிய பெருமை அதிமுகவுக்கு கிடைத்தது.

பெண் வாக்காளர்கள் அதிகம்: இன்றைய சூழலில், அதிமுகவிடம் இருந்து கீழ்பென்னாத்தூர் தொகுதி கைநழுவி திமுகவிடம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் தற்போது 1,15,380 ஆண் வாக்காளர்கள், 1,18,063 பெண் வாக்காளர்கள், இதர பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 445 வாக்காளர்கள் உள்ளன. ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

வெற்றியை தீர்மானிக்கும் வன்னியர் வாக்குகள்: கீழ்பென்னாத்தூர் தொகுதி முழுக்க, முழுக்க விவசாயிகள் நிறைந்த தொகுதி. இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள வாக்காளர்களில் 60 சதவீதம் பேர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

எனவே, வன்னியர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரால் மட்டுமே இந்தத் தொகுதியில் வெற்றிபெற முடியும் என்ற நிலை உள்ளது.

தேர்தல் களத்தில் 18 வேட்பாளர்கள்: 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளராக தமிழக முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி, அதிமுக வேட்பாளராக வேட்டவலம் பேரூராட்சிக் கவுன்சிலர் க.செல்வமணி, பாஜக கூட்டணி வேட்பாளராக ம.சுப்பராயன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக சு.தேவேந்திரன், மக்கள் நலக் கூட்டணி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கு.ஜோதி, பாமக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கோ.எதிரொலி மணியன், கோகுல மக்கள் கட்சி வேட்பாளராக ஆ.கனகவல்லி, சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக பெ.சம்பத், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக இரா.ரமேஷ்பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களைத் தவிர 9 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 18 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மும்முனைப் போட்டி: 18 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருந்தாலும், தொகுதியில் மும்முனைப் போட்டியே நிலுவுகிறது. ஏற்கெனவே அதிமுகவிடம் தோற்ற திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி, இந்த முறை எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்.

இதேபோல, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த தங்களது ஜாதியினரின் வாக்குகளை பெற்று வெற்றிபெற வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் க.செல்வமணி, பாமக வேட்பாளர் எதிரொலி மணியன் ஆகியோர் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

திமுகவின் பலம், பலவீனம்: இந்தத் தொகுதியில் திமுகவுக்கென கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இதுதவிர, திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டிக்கு தொகுதியில் உள்ள தனிப்பட்ட செல்வாக்கு அவரது வெற்றியை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

தனிப்பட்ட செல்வாக்கு இல்லாத அதிமுக வேட்பாளர், வேறு தொகுதியைச் சேர்ந்த பாமக வேட்பாளர் இந்தத் தொகுதியில் போட்டியிடுவது கு.பிச்சாண்டிக்கு மேலும் பலத்தை கூட்டுகிறது. அதேநேரத்தில், திருவண்ணாமலை தொகுதியை பூர்வீகமாகக் கொண்டவர், கடந்த தேர்தலில் தோல்வியடைந்த பிறகு தொகுதி பக்கமே வராதவர் என்பதெல்லாம் கு.பிச்சாண்டியின் பலவீனத்தை கூட்டுகிறது.

அதிமுகவின் பலம், பலவீனம்: கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வேட்டவலம் நகரை பூர்வீகமாகக் கொண்டவர் அதிமுக வேட்பாளர் செல்வமணி. எளிதில் மக்களைச் சந்திக்கக் கூடியவர். சொந்தத் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால், தொகுதி மக்களின் பிரச்னைகளை கண்டறிந்து தீர்த்து வைக்கக் கூடியவர்.

வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதெல்லாம் இவருக்கு பலமாக அமைந்துள்ளது.

பாமகவின் பலம், பலவீனம்: வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே பாமக வேட்பாளர் எதிரொலி மணியனின் பலம். தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர் என்பது அவரது பலவீனம்.

மக்கள் நலக் கூட்டணி, பாஜக வேட்பாளர்கள் எல்லாம் இந்தத் தொகுதியில் வெற்றி பெறும் அளவுக்கு பலம் வாய்ந்தவர்களாக இல்லை என்று கூறப்படுகிறது.

இதர கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் தங்களுக்கான வாக்கு வங்கியை கணக்கிட்டுப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்குத்து வேலைகளில் அதிமுகவினர்: நிலைமை இப்படி இருக்க, க.செல்வமணி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொகுதியின் முக்கிய அதிமுக நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, தேர்தல் பணியாற்றாமல் ஒதுங்கியே இருக்கின்றனர். மேலும், திமுகவுக்கு ஆதரவாக முக்கிய அதிமுக நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

- சா. சரவணப்பெருமாள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT