விழுப்புரம்

சாலைத் தடுப்பில் கார் மோதியதில் அதிமுக மகளிரணி நிர்வாகி உள்பட இருவர் சாவு

DIN

விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்புக் கட்டையில் மோதி கார் விபத்துக்குள்ளானதில் அதிமுக மகளிரணி பிரமுகர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த நாகராஜன் மனைவி கௌரி(43). அதிமுக மகளிரணிச் செயலர். இவரது உறவினர் குப்புசாமியின் மனைவி புவனேஷ்வரி(63). இவர்கள், உறவினர்களுடன் சென்னைக்குச் சென்று, சனிக்கிழமை இரவு காரில் சாத்தூர் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தனியார் காட்டன் மில் அருகே இரவு 8 மணியளவில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் முன்னால் சென்றுகொண்டிருந்த விக்கிரவாண்டி வி.கே. நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன், திடீரென சாலையைக் கடக்க முயன்றார்.
இதனால், அதிவேகமாக வந்த கார் ஓட்டுநர், அவர் மீது மோதாமல் இருப்பதற்காக, காரை இடதுபுறமாக திருப்பியதாகத் தெரிகிறது. இதில் நிலை தடுமாறிய கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியபடி, தேசிய நெடுஞ்சாலை மையத் தடுப்புக் கட்டையின் மீது ஏறி எதிர்புற சாலையில் கவிழ்ந்தது.
அப்போது, விழுப்புரத்திலிருந்து சென்ற டிப்பர் லாரி ஒன்று அந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் வந்த கௌரி, புவனேஷ்வரி, ஓட்டுநர் கண்ணன்(43), கௌரியின் மகன் மணிகண்டன்(17), மகள் சீமதி(13) உறவினரான ராமானுஜம் மகள் ஆர்த்தி(22), கோவிந்தசாமி மனைவி அம்பிகா(46), மோட்டார் சைக்கிளில் வந்த ரவிச்சந்திரன் உள்ளிட்ட 8 பேரும் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த விக்கிரவாண்டி போலீஸார், போக்குவரத்து ஆய்வாளர் அப்பண்டைராஜ் ஆகியோர் காரில் சிக்கியவர்களை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி கௌரி, புவனேஷ்வரி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்தால், விழுப்புரம்-சென்னை சாலையில் விக்கிரவாண்டி பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT