முகப்பு
விழுப்புரம்

தமிழகத்தில் விரைவில் மிகப் பெரிய மாற்றம் வரும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழக ஆட்சியாளர்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் விரைவில் மிகப் பெரிய மாற்றம் வரும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:35 PM
பகிர்:

தமிழக ஆட்சியாளர்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் விரைவில் மிகப் பெரிய மாற்றம் வரும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
 எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா, செயல்வீரர்கள் கூட்டங்களை மாவட்டம் தோறும் நடத்தி, நிறைவாக சென்னையில் எம்ஜிஆர் சாதனைகளைப் பரப்பும் மாநாட்டை நடத்த முடிவு செய்து, கூட்டங்களை நடத்தி வருகிறோம்.
 லட்சியப் பாதையில் வந்த அதிமுக தனிநபரின் கைக்கு போகக் கூடாதென்று 2011-இல் சசிகலாவின் குடும்பத்தை வெளியேற்றி நடவடிக்கை எடுத்தார் ஜெயலலிதா. பிறகு, உதவியாளராக மட்டுமே இருப்பதாக சசிகலாவிடம் எழுதி வாங்கிவிட்டு அவரை மட்டும் சேர்த்தார். ஜெயலலிதா மறையும் வரையில் அனுமதிக்கவில்லை.

தனக்குப் பிறகு பொதுச் செயலர் என்று அவர் யாரையும் அடையாளம் காட்டவில்லை. ஆனால், யார் கையில் ஆட்சியும், கட்சியும் போகக் கூடாதென்று நினைத்தாரோ அவர்கள் கையில் போய்விட்டது. அதை மீட்கவே இந்த தர்மயுத்தம்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து வெளிப்படையான விசாரணை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். 100 நாள்கள் கடந்துவிட்டது.

ஜெயலலிதாவின் சாதனைத் திட்டங்கள் தொடரவில்லை. தமிழகத்தில் ரூ.7 ஆயிரம் கோடியில் ஜியோ கார் தொழிற்சாலை கொண்டுவர ஜெயலலிதா விரும்பினார். அதனால், 25 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

ஆனால், அந்த நிறுவனத்தினர் ஆந்திரத்துக்குச் சென்றுவிட்டனர். இதைப் பார்த்து மற்ற தொழில் நிறுவனங்களும் தயங்குவர். மக்கள் பிரச்னையில் இவர்களுக்கு அக்கறையில்லை. உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் தீர்ப்பு இவர்களுக்குப் பாடமாக அமையும்.

அதிமுக இரு அணிகளாக உள்ளதால் ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் திட்டம் போட்டு வருகிறார். அதிமுக நம்மிடம்தான் முழுமையாக உள்ளது. அவர்களிடம் 2,417 நிர்வாகிகளும், 122 எம்எல்ஏக்களும் மட்டுமே உள்ளனர். ஆமை போல் நகரும் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். 45 ஆண்டுகால இயக்கம் இன்று நிலை தடுமாறி துரோகத்தை நோக்கிச் செல்கிறது.

ஸ்டாலின் ஆட்சிக்கு வர வழியில்லை. கடந்த 2006-11-இல் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருந்த திமுக, காவிரி, முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழர் பிரச்னைகளை தீர்க்கவில்லை. அப்போதே, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை பெற்றுத் தந்திருக்க முடியும். ஆனால், அவர்கள் செய்யவில்லை.

அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு அதை நிறைவேற்றித் தந்தார். முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்தவும் ஜெயலலிதாவே 2011-இல் அனுமதியைப் பெற்றார். எனவே, திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை.

நான் தமிழக மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, தில்லியில் பிரதமரைச் சந்தித்து வந்தேன். அதற்குள் ஸ்டாலினுக்கு கோபம், பிரதமர் தன்னை ஏன் சந்திக்கவில்லை என்கிறார்.

இன்றைய ஆட்சியாளர்கள் நிலை தடுமாறி அதிகார மமதையில் பேசுகின்றனர். மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தவில்லை. நான் சென்னை குடிநீர் பிரச்னையை தீர்க்க ஆந்திர முதல்வரைச் சந்தித்து 2 டிஎம்சி தண்ணீரைப் பெற்று வந்தேன். ஜல்லிக்கட்டுக்கு பிரதமரிடம் பேசி, சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்து சரித்திரம் படைத்தோம்.

ஜெயலலிதா முதல்வராகவே மக்கள் வாக்களித்தனர். ஆனால், அவரது ஆட்சி இன்று நடக்கவில்லை. இதை முடிவுக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஆட்சியாளர்கள் தங்கள் தவற்றைத் திருத்திக் கொள்ளாவிட்டால் தமிழகத்தில் விரைவில் மிகப் பெரிய மாற்றம் வரும் என்றார் அவர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.