குழந்தைகள் உரிமைகள் புத்தகம் வெளியீட்டு விழா: மாவட்ட எஸ்பி பங்கேற்பு
செஞ்சி செக்கோவர் நிறுவனம் உருவாக்கிய குழந்தைகள் உரிமைகள் பயிற்றுநர் கையேடு மற்றும் குழந்தை உரிமைகள், சட்டங்கள், பாதுகாப்பு வழிமுறைகள் என்னும் புத்தக வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செஞ்சி செக்கோவர் நிறுவனம் உருவாக்கிய குழந்தைகள் உரிமைகள் பயிற்றுநர் கையேடு மற்றும் குழந்தை உரிமைகள், சட்டங்கள், பாதுகாப்பு வழிமுறைகள் என்னும் புத்தக வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செக்கோவர் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜான்போஸ்கோ வரவேற்றார். செக்கோவர் நிறுவன இயக்குநர் எம்.சூசைராஜ் புத்தகங்களின் மையக் கருத்துகளை எடுத்துரைத்தார்.
மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட மாவட்ட குழந்தைகள் நன்னடத்தை அலுவலர் சரவணன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பேசியதாவது:
பெரும்பாலான காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு குழந்தைகள் உரிமைகள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற தொண்டு நிறுவனங்களுக்கு குழந்தைகள் உரிமைகள் குறித்து அதிக அளவு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
இந்தப் புத்தகத்தில் குழந்தைகளுக்கான சட்டங்களும், குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது குறித்து எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் புத்தகம் காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்தப் புத்தகத்தை வழங்க வேண்டும். இதற்கான செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன். மேலும் பொதுமக்களும் இந்தப் புத்தகத்தை படித்து பயன் பெற வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் ஏழை, எளிய மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கியும், செக்கோவர் நிறுவனத்தில் தையல் பயிற்சி பயின்ற மகளிருக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் செஞ்சி டிஎஸ்பி. ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர் அரிகிருஷ்ணன், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தரணேஸ்வரி, நிர்வாக அலுவலர் எஸ்.அம்பிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.