முகப்பு
விழுப்புரம்

லாரி கடத்தல்: போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே லாரி கடத்தலில் ஈடுபட்டதாக மத்திய பாதுகாப்புப் படை காவலர் உள்பட 4 பேரை எடைக்கல் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே லாரி கடத்தலில் ஈடுபட்டதாக மத்திய பாதுகாப்புப் படை காவலர் உள்பட 4 பேரை எடைக்கல் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
 கேரளத்திலிருந்து கடந்த 14-ஆம் தேதி லாரியில் ஏற்றிவரப்பட்ட அரிசி பாரம் உளுந்தூர்பேட்டையில் இறக்கப்பட்டது. இதையடுத்து, உளுந்தூர்பேட்டையில் உள்ள சேலம் சாலை வளைவுப் பகுதியில் லாரியை ஓட்டுநர் நிறுத்தினார். அப்போது, அங்கு காரில் வந்த 4 பேர் ஓட்டுநரைத் தாக்கி அவரை காரில் கடத்திச் சென்று சிறிது தொலைவில் கீழே தள்ளிவிட்டு லாரியை கடத்திச் சென்றனர்.
 இதுகுறித்து லாரி ஓட்டுநர் எடைக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், லாரியை கடத்திச் சென்றவர்களை பிடிக்க உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் ஷாகுல்அமீது, உதவி ஆய்வாளர் செல்வவிநாயகம் மற்றும் போலீஸாரைக் கொண்ட தனிப்படையை அமைத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் இராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
 இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியைச் சேர்ந்த தங்கையன் மகனும், மத்திய பாதுகாப்புப் படை காவலருமான ஸ்ரீதர் (32), சென்னையைச் சேர்ந்த முத்துக்குமார் (32), குமார் (28), சீர்காழி வட்டம், தாண்டவபுரம் அழகர் மகன் விஜயபாஸ்கர் (27) ஆகியோருக்கு இந்த லாரி கடத்தலில் தொடர்பு இருப்பதை தனிப்படை போலீஸார் கண்டுபிடித்து அவர்களை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 பின்னர், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கடத்திச் செல்லப்பட்ட லாரி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →