காவிரி பிரச்னையை சட்டரீதியாக அணுகி வருகிறோம்: அமைச்சர்
காவிரி பிரச்னையை அதிமுக அரசு சட்ட ரீதியாக அணுகி வருவதாக தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
காவிரி பிரச்னையை அதிமுக அரசு சட்ட ரீதியாக அணுகி வருவதாக தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக உரிய அழுத்தம் கொடுப்பதுடன், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுவரை இல்லாத வகையில் நாடாளுமன்றம் அதிமுக
எம்.பி.க்களால் முழுமையாக முடக்கப்பட்டது. அறவழியில் உண்ணாவிரதம் மூலமாகவும் அழுத்தம் கொடுத்தோம்.
அதேபோல உச்சநீதிமன்ற காலக்கெடு முடிந்த மறுநாள் காலை நீதிமன்றம் திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு
திங்கள்கிழமை (ஏப். 9) விசாரணைக்கு வருகிறது.
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனால், நடைபயணம் செல்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமாகி ஓராண்டு 4 மாதம் முடியும் வரை மௌனமாக இருந்த முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல ஆலோசனை செய்யப்பட்டதாக தற்போது கூறியுள்ளார். யாருடன் ஆலோசனை செய்தார்? சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல தடை விதித்தது யார்? அதற்கு பின்னணியில் இருந்தது யார்? யாரை காப்பாற்ற இவ்வளவு நாள் வாய்மூடி இருந்தார்? என்பதை அவர் விளக்க வேண்டும். நீட் தேர்வை அதிமுக அரசு எதிர்க்கிறது. அதனால்தான் உச்சநீதிமன்றம் வரை சென்றோம் என்றார் அமைச்சர் சி.வி.சண்முகம்.