விழுப்புரம்

போலீஸாரை தாக்கி தப்பியோடிய இரு ரௌடிகள் கைது

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸாரைத் தாக்கி விட்டு தப்பியோடிய ரௌடிகள் இருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். தப்பியோட முயன்றபோது, ரெளடிகள் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.
வானூர் வட்டம் குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த அர்ஜூனன் மகன் அருண் (25) . அதே பகுதியைச் சேர்ந்த ரௌடி ராஜ்குமாரின் உறவினரான இவர், அப்பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது இடையன்சாவடி கிராமத்தினரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கு, புதுவை மாநிலம், காலாப்பட்டில் அரசுப் பேருந்தை எரித்த வழக்கு உள்ளன.   இவரை ரௌடிகள் பட்டியலில் சேர்த்து போலீஸார் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில்,  வியாழக்கிழமை இரவு ஆரோவில் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் அருள்தாஸ் மற்றும் போலீஸார்,  புதுவை புறவழிச்சாலை இரும்பை சந்திப்புப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,  புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி பைக்கில் வந்த நபரை,  தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, அவர் ரௌடி அருண் என்பது தெரிய வந்தது.
அவரை கைது செய்ய போலீஸார் முயன்றபோது, ஆவேசமடைந்த அருண், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து,  உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திவிட்டு, போலீஸாரின் வாகனங்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பினார். 
இதையடுத்து, அவரைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். வானூர் அருகேயுள்ள நாவற்குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை  பதுங்கியிருந்த அருணை சுற்றி வளைத்தனர். அப்போது,  சுவர் ஏறி குதித்து தப்பியோட முயன்ற அவருக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து, அருணை கைது செய்த ஆரோவில் போலீஸார்,  அவரை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  தொடர்ந்து,  அவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 
விழுப்புரத்தில் மற்றொரு ரௌடி கைது: இதே போல, விழுப்புரம் நகர காவல் உதவி ஆய்வாளர் வேலுமணி தலைமையில்,  வெள்ளிக்கிழமை அதிகாலை காந்திசிலை அருகே போலீஸார் நடத்திய வாகன சோதனையின்போது, பைக்கில் வந்த ரெளடி அறிவழகனின் ஆதரவாளரான விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் கண்ணகித் தெருவைச் சேர்ந்த மணி மகன் பகவதி சுரேந்திரன்(30) என்பவர் சிக்கினார். அப்போது, போலீஸாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற அவர், கீழே விழுந்ததில் கையில் காயம் ஏற்பட்டது.  
அவரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்து,  விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,  சென்னை புழல் சிறையில்  அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT