உலகத் தாய்மொழி தின விழா
திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலகத் தாய்மொழி தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலகத் தாய்மொழி தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருக்கோவலூர் தமிழ்ச் சங்கம், நாடொப்பன செய் அறக்கட்டளை இணைந்து நடத்திய விழாவுக்கு, தமிழ்ச் சங்கத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் எஸ்.இராஜா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை அறங்காவலர் கே.பாலமுருகன் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திருக்கோவிலூர் சார்-ஆட்சியர் சாருஸ்ரீ, உலகத் தாய்மொழி நாள் குறித்துப் பேசினார்.
பின்னர் நடனம்-அன்னபார்வதி அறக்கட்டளை சார்பில் தமிழ் வழியில் பயின்று 10-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், மகேந்திரா நிதி நிறுவனம் சார்பில் 12-ஆம் வகுப்பில் சிறந்த மாணவர்களுக்கு ரூ.64 ஆயிரமும், மாணவர்களை ஊக்குவித்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கினார். ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அ.சிவகுருநாதன், மருத்துவர்கள் நடன.தியாகராசன், பி.சாலினி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எம்.இரவி ஆகியோர் மாணவர்களை பாராட்டிப் பேசினர்.
அறக்கட்டளை நிர்வாகி கதிர்வேல், தமிழ்ச் சங்கச் செயலர் பாரதிமணாளன், செயற்குழு உறுப்பினர் துரை.இராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் பால்ராசு நன்றி கூறினார்.
அனந்தபுரத்தில்... அனந்தபுரம் நுகர்வோர் கண்காணிப்புக் குழு சார்பில் உலக தாய்மொழி தினம் உமையாள்புரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. விக்கிரவாண்டி வட்டம் நுகர்வோர் கண்காணிப்புக் குழு உறுப்பினர் அ.ஜேசுஜீலியஸ்ராஜா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அமுதா முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு தாய்மொழியின் சிறப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்கள் அனைவருக்கும் நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
ஆசிரியர் லட்சுமணமூர்த்தி, ரோட்டரி ரமேஷ், உசேன் பொறுப்பாளர் அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர்.. ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய இந்து ஆரம்ப பள்ளியில் உலகத் தாய்மொழி நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் சி.ரகுராமன் தலைமை வகித்தார். உண்டுஉறைவிடப் பள்ளி தமிழாசிரியர் சி.பத்மலோச்சனி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ம.ஆரோக்கியசாமி வரவேற்றார்.
விழாவில் தமிழ்ச் சங்கத் தலைவர் சு.இராஜேந்திரன் உலகத் தாய்மொழி நாள் குறித்துப் பேசினார். பின்னர் தமிழ்மொழியின் சிறப்பு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார் . ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் பள்ளித் தலைமை ஆசிரியர் இராமலிங்கம், ஆசிரியர்கள் ஜெரினா, லட்சுமி, மேகலா, தீபா, ஞானசெல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.