அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் அரசு இசைப் பள்ளியில், உதவித் தொகைப் பெற்று இசை கற்க விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அரசு இசைப் பள்ளியில், உதவித் தொகைப் பெற்று இசை கற்க விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களும் முறையான இசைக் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கிலும், நமது நாட்டிலும் மற்றும் வெளி நாடுகளிலும் இசை, நடனத்துக்கென ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான வேலைவாய்ப்புகளை கருத்திற்கொண்டும், அனைத்து மாவட்ட மக்களுக்கும் சரிசமமாக இசை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மாவட்டம் தோறும் இசைப்பள்ளிகள் தமிழக அரசால் தொடங்கப்பட்டன.
கலை பண்பாட்டுத் துறையின் கீழ், தமிழகத்தில் தற்போது 17 மாவட்ட ங்களில் அரசு இசைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இசைக் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை
ரூ.400- வழங்கப்பட்டு வருகின்றது.
விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி கடந்த 1998-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, குரலிசை, நாகசுரம், தவில், தேவார இசை, பரதநாட்டியம், மிருதங்கம், வயலின் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. இந்தப் பள்ளிகளில், மாணவர்கள் இசை, நடனம் ஆகியவை முறையான வழியில், தகுதியான ஆசிரியர்களிடம் பயில்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
தற்போது, மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பிரிவுகளில் சேர்தற்கு, குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகியவை சேர வயது வரம்பு 12 முதல் 25 வரையிலும், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். பிற துறைகளுக்கு எழுதப் படிக்க தெரிந்தால் போதுமானது.
பயிற்சி காலம் 3 ஆண்டுகளாகும். பயிற்சி முடிந்தவுடன் அரசுத் தேர்வு நடத்தப்பட்டு, அரசுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். சுய வேலைவாய்ப்பு மற்றும் அரசு வேலை வாய்ப்புக்கு வழி வகுக்கும் இந்தக் கல்வியில் இரு பாலரும் சேரலாம்.
பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை. பிற்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச பேருந்து சலுகை உண்டு. இலவச விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும்.
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், விழுப்புரம், பழைய நீதிமன்றச் சாலை, நகராட்சி திடலில் உள்ள அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.