பொன்முடி மீதான வழக்குகள்: ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு
திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு, சொத்துக் குவிப்பு வழக்குகளின் விசாரணையை வருகிற ஜூன்19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.
திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு, சொத்துக் குவிப்பு வழக்குகளின் விசாரணையை வருகிற ஜூன்19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.
கடந்த திமுக ஆட்சியின் போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரி நடத்தி, அரசுக்கு ரூ.28.37 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, க. பொன்முடி, அவரது மகன் கெüதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கௌதமசிகாமணி, ஜெயச்சந்திரன், கோதகுமார், லோகநாதன், கோபிநாத், சதானந்தம் ஆகியோர் ஆஜராகினர். சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ள பொன்முடியும், வழக்கில் தொடர்புடைய ராஜமகேந்திரனும் ஆஜராகவில்லை. இதையடுத்து, விசாரணையை வருகிற ஜூன்
19-ஆம் தேதிக்கு நீதிபதி பிரியா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கு: இதேபோல கடந்த திமுக ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக க.பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் தொடுத்த வழக்கும், இதே நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, க.பொன்முடி, விசாலாட்சி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை ஜூன் 19-ஆம் தேதிக்கு நீதிபதி பிரியா ஒத்திவைத்தார்.