விழுப்புரம் அஞ்சலகத்தில் கடவுச்சீட்டு சேவை மையம் தொடக்கம்
விழுப்புரம் தலைமை அஞ்சலகத்தில் கடவுச்சீட்டு சேவை மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் தலைமை அஞ்சலகத்தில் ஆறாவதாக இந்த புதிய கடவுச்சீட்டு மையம் அமைகிறது.
விழுப்புரம் தலைமை அஞ்சலகத்தில் கடவுச்சீட்டு சேவை மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் தலைமை அஞ்சலகத்தில் ஆறாவதாக இந்த புதிய கடவுச்சீட்டு மையம் அமைகிறது.
விழுப்புரத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் புதுவை கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளர் அகில் ஆர்.நாயர் வரவேற்றார். விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன், கடவுச்சீட்டு மையத்தை தொடக்கி வைத்துப் பேசியதாவது: கடவுச்சீட்டு சேவை மையம் விழுப்புரத்தில் தொடங்குவது மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாகும். முன்பெல்லாம், கடவுச்சீட்டு பெறுவதற்கு சென்னைக்கு செல்ல வேண்டும். ஆவணங்களில் குறைகள் இருந்தால், மீண்டும் ஊருக்கு அலைய வேண்டிய சூழல் இருந்தது. இனி அவ்வாறு இருக்காது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். எளிமையாக கடவுச்சீட்டு பெறும் இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி பி.கே.அசோக்பாபு பேசுகையில், கடவுச்சீட்டு பெற தமிழகத்திலேயே அதிகமாக, வடமாவட்டங்களில் இருந்து ஆண்டுக்கு 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை வருகின்றன. கடவுச்சீட்டு பெறும் சேவையை எளிமைப்படுத்திட அஞ்சல் துறையுடன் இணைந்து அந்தந்தப் பகுதிகளில் சேவை மையம் தொடங்கப்படுகிறது. முதலில் காரைக்காலில் இந்த மையம் தொடங்கப்பட்டு, கடலூர், வேலூர், சேலம், விருதுநகரைத் தொடர்ந்து, தற்போது விழுப்புரத்தில் 6-வது மையமாக தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
அஞ்சலகங்களில் விரைவில் ஆதார் சேவை: விழாவில் சென்னை மண்டல அஞ்சலகத் துறை இயக்குநர் ஏ.கோவிந்தராஜன் பேசியதாவது: இந்த கடவுச் சீட்டு சேவை மையத்தில், அஞ்சலக-கடவுச்சீட்டுத் துறை ஊழியர்கள் இணைந்து பணியாற்றுவர். இதனால், எளிமையான சேவையைப் பெற முடியும். மாநிலம் முழுவதும் அஞ்சல் துறை மூலம் ஆதார் பதிவு, திருத்தப்பணிகளுக்கான சேவைகள் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட உள்ளது.
செல்வமகள் திட்டத்தில் அதிக வட்டி, வருமான வரி விலக்கு போன்ற சலுகைகள் உள்ளன. இதுபோன்ற பல பயனுள்ள திட்டங்கள் அஞ்சலகத்துறை செய்து வருகிறது என்றார்.
இந்த புதிய மையத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல், விசாரணை போன்ற சேவைப்பணிகள் நடைபெற உள்ளன. விழுப்புரம் அஞ்சலக துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், உதவி இயக்குநர் துரைராஜன், அஞ்சலக அதிகாரி கே.ஏழுமலை, எழுத்தர் வாசு மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.