ஏப்.17-இல் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்கி, மே 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்கி, மே 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தில் வரலாறு சிறப்புமிக்க கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 17-ஆம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்குகிறது.
18-ஆம் தேதி பந்தலடி தெய்வநாயகம் செட்டியார் தோப்பில் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மகாபாரத சொற்பொழிவு தொடங்கி, தொடர்ந்து 18 நாள்கள் விழா நடைபெறுகிறது.
19-ஆம் தேதி சந்தனுசரிதம் நிகழ்ச்சியும், இரவு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. 20-ஆம் தேதி பீஷ்மர் பிறப்பும், 21-ஆம் தேதி தர்மர் பிறப்பும், 22-ஆம் தேதி பாஞ்சாலி பிறப்பும், 23-ஆம் தேதி பகாசூரன் வதமும், 24-ஆம் தேதி பாஞ்சாலி திருமணமும், 25-ஆம் தேதி கூத்தாண்டவர் பிறப்பும் நடைபெறுகின்றன.
26-ஆம் தேதி ராஜசுய யாகமும், 27-ஆம் தேதி விராடபர்வம் நிகழ்ச்சியில் தெய்வநாயகம் செட்டியார் தோப்பில் வெள்ளிக்கால் நடும் நிகழ்ச்சியும், 28-ஆம் தேதி கிருஷ்ணன் தூதும், 29-ஆம் தேதி அரவான் பலியும், கூத்தாண்வர் சுவாமிக்கு பாலாயணமும், 30-ஆம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
மே 1-ஆம் தேதி இரவு சுவாமிக்கு கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுதான் முக்கியமான விழாவாகும். இந்த விழாவில் மும்பை, டெல்லி, புனே, சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வந்து கலந்து கொள்வர்.
பின்னர், திருநங்கைகள் தங்களை மணப்பெண்களைப்போல அலங்கரித்துக்கொண்டு கோயிலில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்வார்.
அன்று இரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வர்.
மே 2-ஆம் தேதி அரவான் சிரசுக்கு முதல்மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பின்னர், அரவான் சுவாமிக்கு 108, 1,008 தேங்காய் என சூரைத் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி, அரவான் களபலி, திருநங்கைகள் தாலி அகற்றும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.
3-ஆம் தேதி விடையாத்தியும், 4-ஆம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெறுகின்றன.