கூட்டுறவுச் சங்கத் தேர்தல் வேட்புமனு பரிசீலனையில் முறைகேடு: சாலையில் பாலை கொட்டிப் போராட்டம்
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே கூட்டுறவுச் சங்க தேர்தல் வேட்புமனு பரிசீலனையில் நிகழ்ந்த முறைகேடுகளைக் கண்டிப்பதாகக் கூறி,
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே கூட்டுறவுச் சங்க தேர்தல் வேட்புமனு பரிசீலனையில் நிகழ்ந்த முறைகேடுகளைக் கண்டிப்பதாகக் கூறி, பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை கொட்டி புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவத்தூர் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் உள்ளது. இதில் 814 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்தச் சங்கத்தில் உள்ள 11 இயக்குநர்கள் பதவிக்கான தேர்தலில் திமுக, அதிமுகவைச் சேர்ந்த 54 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டனர். அதிமுகவைச் சேர்ந்த 11 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், மீதமுள்ள 43 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிவித்து, அதிமுகவைச் சேர்ந்த 11 பேரின் பெயர்கள் கொண்ட பட்டியலை சங்க அறிவிப்பு பலகையில் தேர்தல் அலுவலர் சந்திரசேகரன் ஒட்டியிருந்தார்.
சங்கத்துக்கு புதன்கிழமை காலை பால் ஊற்ற வந்த விவசாயிகள், பெயர்ப் பட்டியலில் அதிமுகவைச் சேர்ந்த 11 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்ததால் ஆத்திரமடைந்தனர்.
இதையடுத்து, அவர்கள் சங்க அலுவலகம் முன் சாலையில் பாலை ஊற்றி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், அங்கிருந்த சங்கச் செயலாளர் விஜயனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பலகையில் இருந்த பெயர்ப் பட்டியலை கிழித்து, கூட்டுறவுச் சங்க நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.