பழங்கால பொருள்களைத் தருவதாக முன்னாள் நீதிபதியிடம் ரூ.4.50 லட்சம் மோசடி
பழங்கால, தொன்மையான பல கோடி ரூபாய் மதிப்பிலான உலோகப் பொருள்கள் தருவதாகக் கூறி விழுப்புரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியிடம் ரூ.4.50 லட்சம் மோசடி செய்ததாக
பழங்கால, தொன்மையான பல கோடி ரூபாய் மதிப்பிலான உலோகப் பொருள்கள் தருவதாகக் கூறி விழுப்புரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியிடம் ரூ.4.50 லட்சம் மோசடி செய்ததாக மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம், சீனிவாச நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கிருஷ்ணமூர்த்தி(62). இவர், மாவட்ட குற்றப் பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், துத்துக்குடியைச் சேர்ந்த தனது நண்பர் செல்வின் என்பவர் மூலம் திண்டிவனத்தைச் சேர்ந்த சரவணன்(எ) பாலகிருஷ்ணன் என்பவர் அறிமுகமானார்.
பாலகிருஷ்ணன் தன்னிடம், விலை உயர்ந்த பழங்கால தொன்மை மிக்க உலோகப் பொருள்கள் உள்ளதாகவும், அவை பல கோடி ரூபாய் மதிப்பு பெறும் என்றும் கூறியுள்ளார்.
இதனை, பெறுவதற்காக தனது நண்பர் செல்வினும், பாலகிருஷ்ணனும் கடந்த 23.4.2015-இல் எனது வீட்டில் வைத்து ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டனர். அப்போது, எனது நண்பர் செல்வின் சார்பாக பாலகிருஷ்ணனுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் தான் கொடுத்தாகவும், அதற்காக ஒரு காசோலையும், உடன்படிக்கை ஆவணமும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
அதன் பிறகு, பாலகிருஷ்ணன் பழங்கால உலோகப்பொருள்களை தராமல் தலைமறைவானார். எனவே, தன்னை ஏமாற்றி மோசடி செய்த பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப் பிரிவு உதவி ஆய்வாளர்கள் ஜெய்சங்கர், அண்ணாதுரை ஆகியோர் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.