காவலர் நினைவுச் சின்னத்துக்கு டி.ஐ.ஜி. மரியாதை
காவலர் நினைவு தினத்தையொட்டி, விழுப்புரத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்துக்கு டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் மலர்வளையம் வைத்து ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
காவலர் நினைவு தினத்தையொட்டி, விழுப்புரத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்துக்கு டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் மலர்வளையம் வைத்து ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் விழுப்புரம் காகுப்பம் ஆயுதப் படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில், உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும்
நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் பங்கேற்று, தமிழக போலீஸார் இருவர் உள்பட நாடு முழுவதும் கடந்த ஆண்டு பணியின்போது வீர மரணம் அடைந்த 414 போலீஸாரின் தியாகத்தை போற்றும் விதமாக அங்குள்ள காவலர் நினைவுச் சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, 21 துப்பாக்கி குண்டுகள் முழக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விழுப்புரம் டி.எஸ்.பி. சங்கர், ஆயுதப்படை டி.எஸ்.பி. நீதிராஜ், ஊர்க்காவல் படை மண்டல தளபதி ஸ்ரீதர், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் நெடுஞ்செழியன், தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன் உள்ளிட்ட போலீஸாரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியின்போது, காவலர்கள் துப்பாக்கியை சுழற்றி மரியாதை செய்யும் பரேடு நடைபெற்றது. காவலர் நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் காவலர்கள் சிலர் தங்களது சட்டையில் கருப்புப் பட்டை அணிந்து ஞாயிற்றுக்கிழமை பணியாற்றினர்.