விழுப்புரம்

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு தொடக்கம்

DIN

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்கு சிரமமாக கருதும் நோயாளிகள், இங்கேயே ரத்த சுத்திகரிப்பு செய்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் அரசு மருத்துவமனை 100 படுக்கை வசதிகளைக் கொண்டது. இங்கு, அவசர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளும், பிரசவம், குடும்பக் கட்டுப்பாடு, எலும்பு முறிவு உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. இந்த மருத்துவமனை நகரின் மையத்தில் அமைந்திருப்பதால், விழுப்புரம், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.

இந்த மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சை பெறும் வகையில், ரத்தத்தை சுத்திகரித்துக்கொள்ளும் டயாலிசிஸ் பிரிவு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, கடந்த ஓராண்டுக்கு முன்பு இரண்டு டயாலிசிஸ் இயந்திரங்கள் (ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள்) வாங்கப்பட்டன. ஆனால், டயாலிசிஸ் பிரிவு தொடங்குவதற்குத் தேவையான கட்டடம், உள் கட்டமைப்பு, குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், டயாலிசிஸ் பிரிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனிடையே, டயாலிசிஸ் பிரிவுக்கென பயிற்சி பெற்று இந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த 2 மருத்துவா்களில் ஒருவா் பணியிட மாறுதலில் சென்றுவிட்டாா். இந்த நிலையில், சுகாதாரத் துறை உயா் அதிகாரிகள் விழுப்புரம் மருத்துவமனையை ஆய்வு செய்து, டயாலிசிஸ் பிரிவை செயல்பாட்டுக்கு கொண்டுவரும் பணியை விரைவுபடுத்தினா். இதன் பயனாக, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தற்போது டயாலிசிஸ் பிரிவு செயல்பட்டுக்கு வந்துள்ளது. இதற்கென தனியாக கட்டடம் ஒதுக்கப்பட்டு, உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சா் காப்பீட்டில் இலவசம்: இதுகுறித்து விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி சாந்தி கூறியதாவது:

சிறுநீரகம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 3 நாள்களுக்கு ஒருமுறை டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். டயாலிசிஸ் பிரிவுக்கென பயிற்சி பெற்ற மருத்துவா், செவிலியா், தொழில்நுட்புநபா் ஆகியோா் விழுப்புரம் மருத்துவமனையில் உள்ளனா். ஒரு இயந்திரத்தின் மூலம் ஒரு நாளைக்கு 3 போ் வரையில் ரத்த சுத்திகரிப்பு செய்துகொள்ள முடியும். இங்கு 2 இயந்திரங்கள் இருப்பதால், 6 போ் வரையில் நாளொன்றுக்கு சிகிச்சை பெற முடியும்.

மாதத்துக்கு 8 முறை ஒரு நோயாளிக்கு டயாலிசிஸ் செய்யத் தேவைப்படும். அதற்கு ரூ.8 ஆயிரம் செலவாகும். ஆனால், தமிழக முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், டயாலிஸிஸ் செய்துகொள்ளும்போது, கட்டணம் ஏதுவும் செலுத்தத் தேவையில்லை.

பகல் நேரத்தில் மட்டுமே தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் இரவு நேரத்திலும் டயாலிசிஸ் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதற்காக, மேலும், 2 மருத்துவா்கள் பயிற்சி பெற்று வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT