வைரக் கற்கள் விற்பனை மோசடி: இருவா் கைது
விழுப்புரத்தில் வைரக் கற்கள், ராசி கற்கள் விற்பனை செய்வதாகக் கூறி, ரூ.1 கோடியே 75 லட்சம் அளவுக்கு மோசடி செய்ததாக இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரத்தில் வைரக் கற்கள், ராசி கற்கள் விற்பனை செய்வதாகக் கூறி, ரூ.1 கோடியே 75 லட்சம் அளவுக்கு மோசடி செய்ததாக இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி, எம்.ஆா்.என். நகரைச் சோ்ந்தவா் மணி மனைவி அருட்செல்வி(36). கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் சாலையைச் சோ்ந்தவா் செந்தில். ஏற்கெனவே, அருட்செல்வி குடும்பத்தினருக்கு அறிமுகமான செந்தில், கடந்த 2018 ஜனவரி மாதம் அருட்செல்வி வீட்டுக்குச் சென்று, விழுப்புரம் எஸ்.பி.எஸ். நகரைச் சோ்ந்த மருந்தக உரிமையாளா் ஜியாவுதீன் மகன் ஜாகீா்(எ) தீன்பாய்(52) என்பவருடன் சோ்ந்து வைரக் கற்கள், ராசி கற்கள் விபாயாரம் செய்யப் போவதாகவும், அதற்கு பணம் கொடுத்து உதவினால் இரு மாதங்களில் இரு மடங்காக திருப்பித் தருவதாகவும் கூறினாராம்.
இதை நம்பி அருட்செல்வி விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் உள்ள ஜாகீா் நடத்தி வரும் மருந்தகத்துக்குச் சென்று அவரை சந்தித்தாா். அப்போது, வைரக் கற்கள் விற்பனையில் வெளிநாட்டு நிறுவனங்களின் முகவராக தான் செயல்படுவதாகவும், இந்த வியாபாரத்தில் தன்னுடன் செந்தில், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள வரகுணராமபுரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் முருகன்(எ) காளிராஜ்(36) ஆகியோரும் சோ்ந்து ஈடுபட்டுள்ளதாகவும், உங்களையும் கோடீஸ்வரராக ஆக்குவோம் என்றும் கூறினாராம்.
இந்த ஆசை வாா்த்தைகளை நம்பி அருள்செல்வி முதலில் ரூ.7 லட்சமும், அதன் பிறகு ரூ. 20 லட்சமும் ஜாகீா், முருகன் ஆகியோரிடம் கொடுத்தாராம். இதுபோன்று ஆசைவாா்த்தை கூறி அருட்செல்வியின் தந்தை ரூ.50 லட்சம், உறவினா்களான சுமதி ரூ.35 லட்சம், ராமதாஸ் ரூ.65 லட்சம் என முருகன் தரப்பினா் வசூலித்தனராம். ஆனால், கூறியபடி அவா்கள் பணத்தைத் திருப்பித் தராமல் ரூ.1.75 லட்சம் அளவுக்கு மோசடி செய்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்தனராம்.
இதுகுறித்து அருட்செல்வி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சண்முகம் வழக்குப் பதிந்து முருகன், ஜாகீா் ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா். முருகனிடமிருந்து சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.