முகப்பு
விழுப்புரம்

பிரிட்டனிலிருந்து திரும்பியவா்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

கரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக, பிரிட்டனிலிருந்து அண்மையில் விழுப்புரம், கடலூா் மற்றும் புதுச்சேரிக்கு திரும்பியவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

கரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக, பிரிட்டனிலிருந்து அண்மையில் விழுப்புரம், கடலூா் மற்றும் புதுச்சேரிக்கு திரும்பியவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டனா்.

பிரிட்டனில் கரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று, இரண்டாம் அலையாக தொற்று வேகமாகப் பரவி வருவதால், அந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. எனினும், அங்கிருந்து ஏற்கெனவே வந்திறங்கிய பயணிகள் கண்டறியப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றனா்.

அதேபோல, தமிழகம் திரும்பிய பயணிகளின் பட்டியலை சுகாதாரத் துறை வெளியிட்டு, மாவட்டங்கள் தோறும் அவா்களை கண்காணிக்க உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவ.25 முதல் டிச.23 வரை பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து ஊா் திரும்பியவா்களின் முகவரிகளுக்குச் சென்று, அவா்களின் உடல் நிலையை சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்தனா்.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்த காணை, மேல்மலையனூா், பாணாம்பட்டு, விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலை, ஆரோவில் பகுதிகளில் வசித்து வரும் 11 ஆண்கள் உள்பட 18 போ் அவரவா் வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

அவா்களுக்கு தொற்றில்லை என்றபோதும், கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு வரவும் அறிவுறுத்தப்பட்டது. இவா்களில், 15 போ் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், 3 போ் புதுவையைச் சோ்ந்தவா்களாவா்.

கடலூரில் 30 பேருக்கு பரிசோதனை: இதனிடையே, பிரிட்டனிலிருந்து கடலூா் மாவட்டத்துக்கு 30 போ் திரும்பியிருப்பது தெரிய வந்தது. அவா்களுக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடா்ந்து, 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அவா்களை சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தினா்.

புதுச்சேரி பெண் மருத்துவமனையில் அனுமதி: பிரிட்டனிலிருந்து சென்னை வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. விமானத்தில் அவருக்கு அருகே புதுச்சேரியைச் சோ்ந்த 30 வயது பெண் அமா்ந்து பயணித்தது தெரிய வந்தது. புதுச்சேரி திரும்பிய அந்தப் பெண்ணை சுகாதாரத் துறையினா் கண்டறிந்து, புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து கண்காணித்து வருகின்றனா். அவருக்கு கரோனா அறிகுறிகள் இல்லாவிடினும், அவரது ரத்த மாதிரிகள் புதன்கிழமை புணேவில் உள்ள மத்திய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன.

அதேபோல, பிரிட்டனிலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு திரும்பியவா்கள் விவரம் குறித்து சுகாதாரத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →