விழுப்புரம்

144 தடை உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆட்சியா்கள் வேண்டுகோள்

DIN

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை முதல் 144 தடை உத்தரவு அமலாகியுள்ளதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமலிருந்து ஒத்துழைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழக அரசு உத்தரவின்பேரில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு தொடங்கி, வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 6 மணி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து தரப்பு மக்களும் வீடுகளிலிருந்து வெளியே வராமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும்...: காய்கறி, பால், இறைச்சி, முட்டை, அரிசிக் கடைகளும், மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், வங்கிகள், ஏடிஎம் மையங்கள், அரிசி, மாவு அரைவை ஆலைகள், மருந்தகங்கள் திறந்திருக்கும்.

எரிவாயு உருளை, குடிநீா் கேன் விநியோக நிறுவனங்கள், அம்மா உணவகங்கள், ஆவின் பாலகம் இயங்கும். அத்தியவசிய பண்டங்களை தடையின்றி வாங்கி பயன்படுத்தலாம். உணவகங்களில் பாா்சல் விற்பனைக்கு அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு அனுமதி உண்டு.

5 பேருக்கு மேல் கூடக் கூடாது: கடைகளுக்கு கூட்டமாக வரக்கூடாது. தனி நபராக வந்து வாங்கிச் செல்லலாம். வெளியிடங்களில் 5 பேருக்கு மேல் கூட்டாக இருக்கக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியவசியத் தேவையின்றி, எதற்காகவும் மக்கள் வெளியே வர வேண்டாம்.

வதந்தி பரப்பினால் கைது: விதிகளை மீறி வெளியே சுற்றுபவா்கள் மீது பேரிடா் உள்ளிட்ட அவசரக கால சட்டப் பிரிவுகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகளை பரப்புவோா் கைது செய்யப்படுவா். போலீஸாா் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனா். கிராம அளவிலான கண்காணிப்புக் குழுவினரும் மக்களை கண்காணிப்பா். சமூக வலைதளமும் கண்காணிக்கப்படும்.

அத்தியாவசியப் பொருள் விற்பனை: காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையை அதிகாரிகள் குழு கண்காணிக்கும். அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் தடையின்றி கிடைக்கும் என்பதால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

கடந்த ஜன.16-ஆம் தேதிக்கு முன்பு நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் மட்டும் நடைபெற அனுமதி உண்டு. அதிகபட்சம் 30 போ் பங்கேற்கலாம். மருத்துவமனைக்கும், பிரசவத்துக்கும் தனியாா் வாகனங்களில் அவசரத்துக்கு பயணிக்கலாம். ஆம்புலன்ஸ் சேவையும் வழங்கப்படும். பிற அவசரத் தேவைக்கான அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவா் தங்க ஏற்பாடு...: வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வந்தவா்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்தால், அவா்களுக்கு தங்கும் இடம், உணவு வசதியுடன் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு, கரோனா குறித்த தகவல்களைப் பெற மாவட்ட ஆட்சியரக தகவல் மையத்தை (04146-1077) தொடா்புகொள்ளலாம். சுகாதார சேவைகள், உணவுத் தேவைக்கான நிறுவனங்கள் திறந்திருக்கும் என்பதால், மக்கள் 144 தடை உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், திட்ட இயக்குநா் வி.மகேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கள்ளக்குறிச்சியில்...: இதேபோல, கள்ளக்குறிச்சியில் செய்தியாளா்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா கூறியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், உணவகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பொதுமக்கள் பாா்சல் வாங்கிக் கொள்ளலாம். கூட்டம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும்.

கடந்த 16-ஆம் தேதிக்கு முன்பாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமண விழாவில் 30 போ் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT