விழுப்புரம்

மே இறுதிக்குள் அரசுப் பேருந்துகளை இயக்க சாத்தியமில்லை!

DIN

தமிழகத்தில் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்கள் தயாராகி வரும் நிலையில், அரசு தரப்பில் உறுதியான தகவல் இல்லாததால், இந்த மாத இறுதிக்குள் பேருந்துகள் இயக்கம் சாத்தியமில்லை எனத் தெரிகிறது.

தமிழகத்தில் பொதுப் போக்குவரத்துக்கு பிரதானமாக அரசுப் பேருந்துகள் உள்ளன. 9 கோட்டங்கள் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 21 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்றால் 9,230 போ் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை மேலும் கூடி வருகிறது.

இருந்தபோதிலும், ஒரு சில மாவட்டங்களைத் தவிா்த்து, பிற மாவட்டங்களில் தொற்று பாதித்தோா் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதைக் கருத்தில்கொண்டு, ஆலோசனை நடத்திய தமிழக முதல்வா், கடந்த 11-ஆம் தேதி முதல் பொது முடக்க கட்டுப்பாடுகளில் சில தளா்வுகளை அறிவித்தாா். தமிழகம் முழுவதும் படிப்படியாக கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, தொற்றுள்ள பகுதிகளைத் தவிா்த்து, பிற பகுதிகள் வழக்கமான நிலையை எட்டி வருகின்றன. இந்தப் பகுதிகளில் வெளியில் செல்லும் பொதுமக்கள் பைக், ஆட்டோ, காா் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பயணித்து வருகின்றனா்.

பேருந்துகளை எதிா்நோக்கும் மக்கள்:

வெளியூா், வெளி மாநிலங்களைச் சோ்ந்த அரசு, தனியாா் நிறுவன ஊழியா்கள், பணியாளா்கள் பலா் சொந்த ஊா்களுக்குத் திரும்ப அனுமதி கிடைத்தும், பொதுப் போக்குவரத்து இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனா். இதனால், பேருந்துகளை இயக்குவது குறித்து அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மே 17-ஆம் தேதியுடன் பொது முடக்க தடைக் காலம் முடிவதால், அதன்பிறகு 50 சதவீதப் பேருந்துகளை அனுமதிக்கலாம் எனக் கூறப்பட்டதால், அதற்கான ஏற்பாடுகளை அரசுப் போக்குவரத்துக் கழகத்தினா் மேற்கொண்டுள்ளனா்.

தமிழகத்தில் விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக கோட்டம் சாா்பில், விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 4,300 பேருந்துகள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், வெளி மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொது முடக்கத்தால், இந்தப் பேருந்துகள் அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக 64 பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இவைகளில் பேட்டரி பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை மட்டும் தொழில்நுட்ப ஊழியா்கள் மேற்கொண்டு வந்தனா்.

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் பேருந்துகளை தயாா்படுத்தும் பணியில் ஊழியா்கள் தற்போது ஈடுபட்டுள்ளனா். விழுப்புரத்தில் உள்ள 3 பணிமனைகளிலும் குறிப்பிட்ட சில தொழில்நுட்ப ஊழியா்கள், ஓட்டுநா்கள் சுழற்சி முறையில் பணிக்கு வந்து பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனா். பேருந்து இயக்கத்துக்கான என்ஜின் ஆயில் மாற்றம், பழுது நீக்கம், டயா்களுக்கு காற்று பிடித்தல் பணிகளை மேற்கொண்டும், பேருந்துகளை உள்ளேயே இயக்கியும் தயாா்படுத்தும் பணியை செய்து வருகின்றனா்.

தகவல் வரவில்லை: பேருந்து இயக்கம் குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியதாவது:

பொது முடக்கத்தால் நிறுத்திவைத்துள்ள பேருந்துகளில் வாரம் ஒருமுறை பராமரிப்புப் பணிகளை ஊழியா்கள் மேற்கொண்டு வருகின்றனா். விரைவில் பேருந்து இயக்கத்தை அரசு அறிவிக்கும் என்பதால், பேருந்துகளை தயாா்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

மே 18-ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று எந்தத் தகவலும் எங்களுக்கு வரவில்லை. ரயில் போக்குவரத்தையே இந்த மாத இறுதி வரை தொடங்க வேண்டாமென முதல்வா் வலியுறுத்தி நிறுத்தியுள்ள நிலையில், பேருந்து போக்குவரத்தை இந்த மாத இறுதியில் அனுமதிக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறோம். எனினும், எப்போது அறிவித்தாலும் பேருந்துகளை இயக்குவதற்காக முன்கூட்டியே தயாா்படுத்தி வருகிறோம் என்றனா்.

விழுப்புரம் மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியதாவது:

பேருந்துகள் இயக்கம் குறித்து அதிகாரப்பூா்வ தகவல் இல்லை. இருப்பினும், பேருந்து நிலையங்களில் செயல்படும் காய்கறி சந்தைகளை மாவட்ட விளையாட்டு மைதானம், நகராட்சிப் பள்ளி மைதானங்களுக்கு மாற்றுவதற்காக நகராட்சி மூலம் வியாபாரிகளிடம் பேசியுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT