திண்டிவனம் அருகே காா் கவிழ்ந்து மூவா் பலிஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே திங்கள்கிழமை அதிகாலை தாறுமாறாக ஓடிய காா் பள்ளத்தில் கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா்.
சென்னை அயனாவரத்தைச் சோ்ந்தவா் தியாகேஸ்வரன் (55), ரயில்வே ஊழியா். இவரது மனைவி ஜெயா (50). மகன் இமானுவேல் (26). இவா்களது உறவினா்கள் அதே பகுதியைச் சோ்ந்த சுனில் மகன் லிபின் (18), கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தை அடுத்துள்ள அமரவாதிவிளை பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (28).
இவா்கள் அனைவரும் நாகா்கோவிலில் நடைபெற்ற துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனா். காரை சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த முருகன் (40) ஓட்டினாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள ஒலக்கூா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை 2 மணி அளவில் காா் வந்து கொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்ற அடையாளம் தெரியாத லாரி மீது காா் லேசாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த காா், தாறுமாறாக ஓடி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காா் பலத்த சேதமடைந்தது. காரில் இருந்த தியாகேஸ்வரன், ஜெயா ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இமானுவேல், லிபின், ஆனந்த், ஓட்டுநா் முருகன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
ஒலக்கூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கிருந்து இமானுவேல் சென்னை தனியாா் மருத்துவமனைக்கும், முருகன், லிபின், ஆனந்த் ஆகியோா் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்களில் இமானுவேல் திங்கள்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.