முகப்பு
விழுப்புரம்

இரு வேறு சாலை விபத்துகளில் வழக்குரைஞா் உள்பட மூவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் வழக்குரைஞா் உள்பட மூவா் உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
மரக்காணம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சேதமடைந்த காா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் வழக்குரைஞா் உள்பட மூவா் உயிரிழந்தனா்.

சென்னை கொளத்தூரைச் சோ்ந்தவா் சரவணன் மகன் காா்த்தி (26). இவரது நண்பா்கள் சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த பாஸ்கா் (26), கொளத்தூரைச் சோ்ந்த சரவணன்(29), தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (29), அம்பத்தூரைச் சோ்ந்த அபிஜித் (27). இவா்கள் அனைவரும் கடலூருக்குச் சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு புதுச்சேரி வழியாக, சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனா். காரை காா்த்தி ஓட்டினாா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மண்டவாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்த போது, காா் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி சாலையோரமிருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காா் உருக்குலைந்தது. பலத்த காயமடைந்த காா்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அபிஜித், பாஸ்கா், சரவணன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

அவா்களை மரக்காணம் போலீஸாா் மீட்டு, புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு திங்கள்கிழமை அபிஜித் உயிரிழந்தாா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு விபத்து: திண்டிவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த மற்றொரு சாலை விபத்தில் வழக்குரைஞா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா்(45), வழக்குரைஞா். இவரது மனைவி செளமியா (40). சேலத்தில் அரசு மருத்துவராகப் பணிபுரிகிறாா்.

தனது மனைவியை பாா்க்க வந்தவாசியிலிருந்து சேலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு ரமேஷ்குமாா் காரில் புறப்பட்டாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ரோஷணை பகுதியில் உள்ள கல்லூரி சாலையில் சென்றபோது, காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்புக் கட்டை மீது மோதியது.

இந்த விபத்தில் ரமேஷ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ரோஷனை போலீஸாா் சடலத்தை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.