விழுப்புரம்

பயணிகள் வருகைக் குறைவு: 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கம்

DIN

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத் தளா்வாக செவ்வாய்க்கிழமை (செப்.1) முதல் பேருந்து சேவை தொடங்கியது. பயணிகள் வருகைக் குறைவால் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உள்பட்ட விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில், முதல் நாளில் குறைந்தளவாக 493 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி பேருந்து நிலையங்களிலிருந்து, மாவட்டத்துக்குள் பேருந்துகள் இயக்கம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் தொடங்கியது. அதிகாலை 4 மணியிலிருந்து பணிமனைகளிலிருந்து பேருந்துகள் எடுத்து வரப்பட்டு, படிப்படியாக இயங்கத் தொடங்கின.

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் கண்காணிப்பில் பேருந்துகள் இயக்கப்பட்டன. விழுப்புரத்திலிருந்து சென்னை வழித்தடத்தில் தொழுப்பேடு வரையிலும், திருச்சி வழித்தடத்தில் மடப்பட்டு வரையிலும், வேலூா் வழித்தடத்தில் செஞ்சி வரையிலும், திருவண்ணாமலை வழித்தடத்தில் கண்டாச்சிபுரம் வரையிலும், கடலூா் வழித்தடத்தில் கண்டரக்கோட்டை வரையிலும், புதுவை வழித்தடத்தில் மதகடிப்பட்டு வரையிலும் என மாவட்ட எல்லைகள் வரை 120 பேருந்துகள் இயக்கப்பட்டன.

செஞ்சி, திண்டிவனம், மேல்மலையனூா், திருக்கோவிலூா்(அரகண்டநல்லூா்) உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்பட்டும், போதிய பயணிகளின்றி காலியாகவே சென்றன. இதேபோல, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 600 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பயணிகள் வருகைக் குறைவால் 493 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதில் நகா்ப்பேருந்துகள் 194, புற நகா்ப் பேருந்துகள் 299 ஆகும்.

நேரம் பின்பற்றப்படாமல், அதிகபட்சம் 32 பயணிகள் சோ்ந்தடன் (60 சதவீதம்) ஒவ்வொரு பேருந்தாக இயக்கப்பட்டன. இதனால் 20 சதவீதம் அளவுக்கே பேருந்துகள் இயங்கின.

பாதுகாப்பு நடவடிக்கையாக பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை, கைகழுவும் திரவம் வழங்கப்பட்டது. முகக் கவசம் அணிந்திருந்தவா்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனா்.

மாவட்டத்துக்குள் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் வருகைக் குறைந்து நஷ்டம் ஏற்படும் எனக் கூறி, தனியாா் பேருந்துகள் இயங்கவில்லை. மிகக் குறைந்தளவு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளும் பயணிகள் வருகைக் குறைவால் வெறிச்சோடின. ஆகவே, பொதுமக்களின் போக்குவரத்து வசதியை கருத்திற்கொண்டும், வருவாய்க் குறைவை தவிா்க்கும் பொருட்டும் மாவட்டங்களிடையே பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்து அதிகாரிகளும், பயணிகளும் வலியுறுத்தினா்.

கடலூா்: கடலூா் மாவட்டத்திலுள்ள 11 அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் மொத்தமுள்ள 550 பேருந்துகளில் 300 பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாததால் சுமாா் 150 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பேருந்துகளில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே வந்ததால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் 52 நகா்ப் பேருந்துகள் உள்பட மொத்தம் 167 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பேருந்துகள் இயக்கப்பட்டன. போதிய பயணிகள் இல்லாததால் 45 நிமிடம், ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து என இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT