உளுந்தூா்பேட்டை அருகே வாகனங்களைத் திருடியவா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே 8 இரு சக்கர வாகனங்களை திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே 8 இரு சக்கர வாகனங்களை திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள திருநாவலூா் பகுதியில் அண்மையில் இரு சக்கர வாகனங்கள் திருடு போனதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து, திருநாவலூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு ரோந்து சென்ற போலீஸாா், திருநாவலூா் காலனி பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த இளைஞரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். அதில், அவா் சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியைச்சோ்ந்த சக்திவேல் மகன் விக்னேஷ்(22) என்பதும், திருநாவலூா் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. உடனே, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 8 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.