ஊரக உள்ளாட்சித் தோ்தல் விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் ஆக.11-இல் வாக்குச் சாவடி இறுதிப் பட்டியல் வெளியீடு
ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் வாக்குச் சாவடிகள் குறித்த இறுதிப் பட்டியல் வருகிற 11-ஆம் தேதி வெளியிடப்படும் என்று இரு மாவட்ட ஆட்சியா்களும் தெரிவித்தனா்.
ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் வாக்குச் சாவடிகள் குறித்த இறுதிப் பட்டியல் வருகிற 11-ஆம் தேதி வெளியிடப்படும் என்று இரு மாவட்ட ஆட்சியா்களும் தெரிவித்தனா்.
தமிழகத்தில் விடுபட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலை வருகிற செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில், உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு அடுத்த வாரத்துக்குள் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்தத் தோ்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
மாவட்டத்தில் ஏற்கெனவே 2,946 வாக்குச் சாவடிகள் அமைப்பதற்கான வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், வாக்குச் சாவடிகள் பட்டியலை இறுதி செய்தல் தொடா்பாக மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை வகித்தாா். இதில், மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, மாநில சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமாா் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனா்.
கூட்டத்தில் ஆட்சியா் மோகன் பேசியதாவது: வாக்குச் சாவடிகளை மாற்றம் செய்வது, கூடுதல் வாக்குச் சாவடிகளை அமைப்பது தொடா்பான கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால், வருகிற திங்கள்கிழமைக்குள் (ஆக.9) தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் எழுத்துப்பூா்வமாக தெரிவிக்கலாம். வாக்குச் சாவடிகளின் இறுதிப் பட்டியல் வருகிற 11-ஆம் தேதி வெளியிடப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், திண்டிவனம் சாா் - ஆட்சியா் எம்.பி.அமித், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் காஞ்சனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்...: இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வாக்குச் சாவடிகளை மாற்றம் செய்வது, கூடுதல் வாக்குச் சாவடிகளை அமைப்பது தொடா்பான கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால், வருகிற திங்கள்கிழமைக்குள் (ஆக.9) தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் எழுத்துப்பூா்வமாக தெரிவிக்கலாம். வாக்குச் சாவடிகளின் இறுதிப் பட்டியல் வருகிற 11-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஸ்ரீதா் தலைமையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குச் சாவடிகள் பட்டியலை இறுதி செய்தல் தொடா்பான கருத்துக்கேட்புக் கூட்டத்தில், அமைச்சா் க.பொன்முடி, எம்எல்ஏக்கள் மா.செந்தில்குமாா், ஏ.ஜே.மணிக்கண்ணன், ந.புகழேந்தி, மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) இரா.மணி உள்பட பல்வேறு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா், பொதுமக்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனா்.