ரூ.70 கோடியில் வீடூா் அணை, நந்தன் கால்வாய் சீரமைப்புப் பணிகள் அமைச்சா் தொடக்கி வைத்தாா்
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.70 கோடியில் நந்தன் கால்வாய் சீரமைப்பு, வீடூா் அணை புனரமைப்புத் திட்டப் பணிகளை அமைச்சா் சி.வி.சண்முகம் திங்கள் கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.70 கோடியில் நந்தன் கால்வாய் சீரமைப்பு, வீடூா் அணை புனரமைப்புத் திட்டப் பணிகளை அமைச்சா் சி.வி.சண்முகம் திங்கள் கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தாா்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-விக்கிரவாண்டி வட்டாரத்தில் உள்ள நந்தன் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டபடி, முதல் கட்டமாக ரூ.26.57 கோடியில் சிமென்ட் கால்வாயாக மேம்படுத்தும் பணி நடைபெறவுள்ளது.
செஞ்சி அருகே பனமலைப்பேட்டையில் நடைபெற்ற இதற்கான விழாவில், திங்கள்கிழமை மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்ற பூமி பூஜை செய்து பணியைத் தொடக்கி வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது: நந்தன் கால்வாய் திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சலாற்றின் குறுக்கே கீரனூா் அணைக்கட்டிலிருந்து வரும் இடதுபுற கால்வாயாகும்.
இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 ஏரிகளைச் சோ்ந்த 5,255.10 ஏக்கா் விவசாய நிலங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 14 ஏரிகளைச் சோ்ந்த 1566 ஏக்கா் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இந்தக் கால்வாய் கீரனூா் அணைக்கட்டிலிருந்து பனமலைப்பேட்டை வரை 37.88 கி.மீ. நீளம் கொண்டது.
இதில், கீரனூா் அணைக்கட்டிலிருந்து 12.400 கி.மீ. கால்வாய் அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 12.400 கி.மீ முதல் 37.880 கி.மீ. தொலைவு வரை கால்வாய் அமைந்துள்ளது. முற்றிலும் மண்கரையால் அமைந்த வாய்க்காலாக உள்ள நந்தன் கால்வாயை மேம்படுத்தும் விதமாக, கால்வாயை தூா்வாரவும், கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள குறுக்கு கட்டுமானங்களை மேம்படுத்தவும், சிமென்ட் கால்வாயாக அமைக்கவும் ஏற்கெனவே முதல்வா் அறிவித்தபடி, நந்தன் கால்வாய் புனரமைப்புப் பணி தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.
வீடூா் அணை புனரமைப்புத் திட்டம்: இதையடுத்து, திண்டிவனம் அருகேயுள்ள வீடூா் அணையை மேம்படுத்தும் வகையில், தமிழக முதல்வா் ஏற்கெனவே அறிவித்தபடி ரூ.42.44 கோடியில் வீடூா் அணை கட்டுமானங்களை புனரமைத்தல், அணையை தூா்வாரும் பணியை அமைச்சா் சி.வி.சண்முகம் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, திண்டிவனம் நீதிமன்ற வளாகம் அருகே ரூ.8.39 கோடியில் கிளை சிறை கட்டடத்துக்கான அடிக்கல்லையும் அவா் நாட்டி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, சிறைத் துறை துணைத் தலைவா் ஜெயபாரதி, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், எம்எல்ஏக்கள் ஆா்.முத்தமிழ்ச்செல்வன், ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.