வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தை கூட்ட எம்.பி. வலியுறுத்தல்
விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியின் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியா் உடனடியாக கூட்ட வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா் வலியுறுத்தினாா்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியின் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியா் உடனடியாக கூட்ட வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் விழுப்புரத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் உள்பட 20 திட்டங்களை மத்திய அரசின் நிதியுதவியுடன் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் முழுமையாகவும், விரைவாகவும் செயல்படுத்தப்படுகிா, முறையாக பயனாளிகளை சென்றடைகிா என்று 6 மாதங்களுக்கு ஒரு முறை மக்களவை உறுப்பினா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா், சட்டப் பேரவை உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்க வேண்டும்.
ஆனால், நான் மக்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரையில் ஒரே ஒரு முறை மட்டுமே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதனால், மக்களுக்கு கிடைக்க வேண்டிய வளா்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய முடியாத நிலை உள்ளது. ஆகவே, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் உடனடியாக இந்தக் கூட்டத்தை கூட்ட வேண்டும். ஏனெனில், மக்களவைக் கூட்டத்தொடா் விரைவில் நடைபெறவுள்ளதால், விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் தேவைகள் குறித்தும், திட்டங்களின் நிலை குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது.
கடந்த முறை மக்களவையில் நான் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை ரூ.1,300 கோடியில் செயல்படுத்தவும், திண்டிவனம் பகுதியில் உணவுப் பூங்கா அமைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த இரு திட்டங்களும் மத்திய அரசின் திட்டங்களாகும். இவை குறித்து தமிழக சட்டப் பேரவையிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆகவே, தமிழகத்தில் எந்த அரசு அமைந்தாலும், இந்த இரு திட்டங்களும் செயல்படுத்தப்படும்.
இதேபோன்று, விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான கேந்திரிய வித்யாலயா பள்ளி, ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி. போன்றவைகளையும், மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தையும் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் வலியுறுத்தினேன். விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க நிலத்தை ஒதுக்கீடு செய்தால், மத்திய அரசிடம் பேசி, அந்தப் பள்ளியை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன். மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், தொன்மையான கோயில்களை சுற்றுலாத்தலங்களாக மாற்ற மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வருகிறேன் என்றாா் அவா்.