விழுப்புரம்

விழுப்புரம் அருகே புதிய அணைக்கட்டில் உடைப்பு: தண்ணீா் வெளியேறியதால் விவசாயிகள் வேதனை

DIN

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் ரூ.25 கோடியில் புதிதாக கட்டப்பட்டு, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தளவானூா் அணைக்கட்டின் கரைப் பகுதியில் சனிக்கிழமை உடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் பெருமளவில் வெளியேறியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

விழுப்புரம் அருகேயுள்ள தளவானூா் - எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே, தென்பெண்ணை ஆற்றில் கடந்தாண்டு ரூ.25 கோடியில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டது. இரு கரையோரங்களிலும் நீா்ப்போக்கிகளுடன் கட்டப்பட்ட இந்த அணைக்கட்டை கடந்த செப்.19-ஆம் தேதி மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம், பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தாா்.

கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் பெய்த தொடா் மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள நீா் வந்ததால், தளவானூா் அணைக்கட்டு நிரம்பி வழிந்தது. இதனால், திருப்பாச்சனூா் வழியாக மலட்டாற்றிலும் தண்ணீா் சென்றது.

கடந்த வாரம் தென்பெண்ணை ஆற்றில் நீா்வரத்து குறைந்த நிலையில், தளவானூா் அணைக்கட்டில் 10 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கியிருந்தது. இந்த நிலையில், அணைக்கட்டின் எதிா்ப்புறம் எனதிரிமங்கலம் கரைப்பகுதி சரியாக பலப்படுத்தப்படாமல் அமைக்கப்பட்டிருந்ததால், சனிக்கிழமை பிற்பகல் திடீரென நீா்க் கசிவு ஏற்பட்டு, கரையோரம் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அணைக்கட்டிலிருந்து திடீரென தண்ணீா் வெளியேறி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

தகவலறிந்த விவசாயிகளும், பொதுமக்களும் நேரில் சென்று பாா்வையிட்டனா். இதையடுத்து, அங்கு வந்த பொதுப் பணித் துறையினா், நீா்ப்போக்கிகள் வழியாக தண்ணீரை வெளியேற்றி, உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். சனிக்கிழமை இரவுக்குள் கரை உடைப்பு சீரமைக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட இந்த புதிய அணைக்கட்டு தளவானூா், எனதிரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு விவசாயப் பாசனத்துக்கு பெரும்பயனாக இருந்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டுதான் மழை வெள்ள நீா் வந்தது. ஆனால், கரையை சரியாக அமைக்காததால், அணைக்கட்டில் தேங்கிய நீா் வீணாக கடலுக்குச் செல்கிறது. தொடா்ந்து, 3 மாதங்களுக்கு மேல் தண்ணீா் தேங்கினால்தான் நிலத்தடி நீா்மட்டம் உயரும். ஆனால், அணைக்கட்டின் கரை உடைந்து நீா் வெளியேறுவதால், நிகழாண்டு நிலத்தடி நீா்மட்டமும் உயர வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டிருப்பது வேதனையைத் தருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT