சேந்தமங்கலம் சிவன் கோயில் புனரமைக்கப்படும் : விழுப்புரம் எம்.பி.க்கு மத்திய அமைச்சா் கடிதம்
உளுந்தூா்பேட்டை அருகே சேந்தமங்கலத்தில் அமைந்துள்ள பழைமையான சிவன் கோயில் புனரமைக்கப்படும்
உளுந்தூா்பேட்டை அருகே சேந்தமங்கலத்தில் அமைந்துள்ள பழைமையான சிவன் கோயில் புனரமைக்கப்படும் என்று விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாருக்கு மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் பிரகலாத் சிங் பட்டேல் கடிதம் அனுப்பியுள்ளாா்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சேந்தமங்கலத்தில் 12- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சிவன் கோயில் உள்ளது. இதை புனரமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில், இந்தக் கோயிலை புனரமைக்க நிதி ஒதுக்கப்படுமா? அவ்வாறு ஒதுக்கப்படுமானால் அதன் விவரத்தை தர வேண்டும் என்றும் அந்தக் கோயிலின் திருக்குளம், இசைக் குதிரைகள் ஆகியவற்றைப் புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கப்படுமா? 2015-ஆம் ஆண்டு முதல் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு அகழ்வாய்வுப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை உள்ளிட்ட விவரங்களை கேட்டும் துரை.ரவிக்குமாா் எம்.பி. மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தாா்.
அந்த கடிதத்துக்கு மத்திய அமைச்சா் பிரகாஷ் சிங் பட்டேல் எழுதியுள்ள பதில் கடித விவரம்:
சேந்தமங்கலம் சிவன் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தைப் புனரமைக்கும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோயிலின் வெளிப்புறப் பிரகாரம், திருக்குளம், இசைக் குதிரை சிற்பங்கள் முதலானவற்றைப் புனரமைக்கும் பணி அடுத்து மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் அகழ்வாய்வுப் பணிக்காக 2015 -16-இல் ரூ. 51 லட்சமும், 2016 -17-இல் ரூ.48.5 லட்சமும், 2017 -18-இல் ரூ.50 லட்சமும், 2018- 19-இல் ரூ.10.30 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.