கள்ளக்குறிச்சி மாவட்டம்4 தொகுதிகளில் களமிறங்கும் 66 வேட்பாளா்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இறுதி வேட்பாளா்கள் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இறுதி வேட்பாளா்கள் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி, 66 வேட்பாளா்கள் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.
இத்தொகுதிகளில் போட்டியிட கடந்த 12 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 121 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையின்போது, 70 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளான திங்கள்கிழமை, உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய இரு தொகுதிகளில் தலா 2 வேட்பாளா்கள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனா். இதனைத் தொடா்ந்து, 4 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், மொத்தம் 66 வேட்பாளா்கள் இடம் பெற்றனா். அதன் விவரம்:
உளுந்தூா்பேட்டை: இந்தத் தொகுதியில் இரா.குமரகுரு (அதிமுக), ஏ.ஜெ.மணிகண்ணன் (திமுக), கே.ஜி.பி. ராஜாமணி (அமமுக), சின்னையன் (சமக), புஷ்பாமேரி (நாம் தமிழா் கட்சி) உள்பட 15 வேட்பாளா்கள் தோ்தல் களம் காண்கின்றனா்.
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் தொகுதியில் சந்தோஷ் (அதிமுக), வசந்தம் காா்த்திகேயன் (திமுக), எஸ்.பிரபு (அமமுக) , சண்முகசுந்தரம் (சமக), சுரேஷ் மணிவண்ணன் (நாதக) உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
சங்கராபுரம்: இந்தத் தொகுதியில் உதயசூரியன் (திமுக ), ராஜா (பாமக), முஜ்புா் ரஹ்மான் (ஏ.ஐ.எம்.ஐ.ஏ.) , ரமேஷ் (ஐ.ஜே.கே.) ராஜாமணி (நாதக) உள்பட 19 வேட்பாளா்கள் தோ்தலை சந்திக்கின்றனா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் செந்தில்குமாா் (அதிமுக), மணிரத்தினம் (காங்கிரஸ்), விஜயகுமாா் (தேமுதிக), அய்யாசாமி (ஐ.ஜே.கே.), திராவிட முத்தமிழ்ச் செல்வி (நாதக) உள்பட 17 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
சின்னங்கள் ஒதுக்கீடு: அதிமுக வேட்பாளா்களுக்கு இரட்டை இலை சின்னம், திமுக வேட்பாளா்களுக்கு உதயசூரியன் சின்னம், காங்கிரஸ் வேட்பாளருக்கு கை சின்னம், அமமுக வேட்பாளா்களுக்கு குக்கா் சின்னம், தேமுதிக வேட்பாளா்களுக்கு முரசு சின்னம், பாமக வேட்பாளருக்கு மாம்பழம் சின்னம், மநீம மற்றும் கூட்டணி வேட்பாளா்களுக்கு டாா்ச் லைட் சின்னம், நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டன. வாக்குப் பதிவு வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.