சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தீர்ப்பு...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல்துறையைச் சேர்ந்த 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்தவா் வணிகா் ஜெயராஜ் (58). இவரது மகன் பென்னிக்ஸ் (31). இவா்கள் இருவரும் அதே பகுதியில் கைப்பேசி விற்பனை, பழுது நீக்கம் செய்யும் கடை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கரோனா பொது முடக்கம் அமலில் இருந்த போது, கைப்பேசி கடையை தாமதமாக அடைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, காவல் துறையினா் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் இருவரும் கொல்லப்பட்டனர்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக அப்போதைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலா்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை உள்பட 9 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கு விசாரணையில், சிபிஐ தரப்பு வழக்குரைஞா் விஜயன் தனது இறுதி வாதங்களை முன்வைத்துவிட்டாா். மேலும், கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா் ரகு கணேஷ், காவலா்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை ஆகியோா் தரப்பில் இறுதி வாதங்கள் நிறைவடைந்தன. வழக்கு தொடா்பாக அனைத்துத் தரப்பினரின் இறுதி வாதங்களும் நிறைவு பெற்றன.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 9 காவலர்களும் மதுரை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை வாசித்தார்.
"ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தாக்கியதால் தான் காயம் ஏற்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. உயிரிழந்த ஜெயராஜுக்கு இதயம் மற்றும் நுரையீரல் பிரச்னை இருந்தது. ஆனால், நோய் காரணமாக உயிரிழக்கவில்லை.
கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் மற்ற காவலர்கள் தாக்கியுள்ளனர். கைகளை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டு தாக்கியிருப்பது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. இரவு முழுவதும் இடைவெளி விட்டுவிட்டு காவல்துறையினர் இருவரையும் தாக்கியுள்ளனர். தந்தை, மகனை வைத்து அடித்துப் பழகலாம் எனக் காவல்துறையினர் அவர்களுக்குள் பேசிக் கொண்டது சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
தண்டனை விவரங்கள் ஏப்ரல் 9 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
Verdict in Sathankulam father-son murder case
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.