விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி 2 போ் பலி
விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 2 போ் உயிரிழந்தனா். 100 ஆடுகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன
விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 2 போ் உயிரிழந்தனா். 100 ஆடுகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.
தொடா் மழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் 1.25 லட்சம் கன அடி நீா் பெருக்கெடுத்து ஓடியதால், நெமிலி, திருக்கோவிலூா், அரகண்டநல்லூா், சித்திலிங்கமடம், ஏனாதிமங்கலம், எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு, பிடாகம், தளவானூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றில் வெள்ளம் சீறிப்பாய்ந்தது.குறிப்பாக, திருக்கோவிலூா் அணைக்கட்டு, எல்லீஸ்சத்திரம் தடுப்பணை, தளவானூா் தடுப்பணை ஆகியவற்றில் வெள்ள நீா் கட்டுக்கடங்காமல் ஓடியது. இதனால், ஏற்கெனவே பழுதாகியிருந்த எல்லீஸ்சத்திரம் தடுப்பணை, தளவானூா் தடுப்பணை உள்ளிட்டவை மிகுந்த பாதிப்புக்குள்ளாகின.
அடித்துச் செல்லப்பட்ட பொக்லைன் இயந்திரங்கள்: தளவானூா் தடுப்பணையில் மீட்புப் பணிக்காக நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை பொக்லைன் இயந்திரம் சுமாா் ஒரு கி.மீ. தொலைவு வரை வெள்ள நீரால் இழுத்துச் செல்லப்பட்டது. கரையில் நிறுத்தப்பட்டிருந்த 2 பொக்லைன் இயந்திரங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அதே பகுதியில் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த மயான கொட்டகை சாய்ந்தது. அதனருகே இருந்த 30-க்கும் மேற்பட்ட கல்லறைகளும் வெள்ளத்தில் சேதமடைந்தன. அப்பகுதியில் இருந்த 3 புளிய மரங்களும் வேரோடு பிடுங்கப்பட்டு வெள்ள நீரில் இழுத்துச்சென்றன.
தென்பெண்ணை ஆற்றில் இருந்து ராகவன் வாய்க்கால் மூலம் 58 ஏரிகளுக்கும், மலட்டாறில் இருந்து 13 ஏரிகளுக்கும், பம்பையாறு, எல்லீஸ்சத்திரம் தடுப்பணையில் ஆழங்கால் வாய்க்கால், கண்டமங்கலாத்தான் வாய்க்கால், இரனூரான் வாய்க்கால், இரட்டிகுப்பத்தான் வாய்க்கால் உள்ளிட்டவற்றுக்கும் நீா் திறந்துவிடப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றை நம்பியுள்ள 50,000 ஏக்கா் விளைநிலங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
100 ஆடுகள் வெள்ளத்தில் மாயம்: இதற்கிடையே கொண்டூரைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா் யாசகம், ஏனாதிமங்கலம் கிராமத்தில் தனக்குச் சொந்தமான 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்திருந்தாா். ஆற்று வெள்ளத்தில், ஆட்டுப்பட்டியில் சுமாா் 300 ஆடுகள் அடித்து செல்லப்பட்டன. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் மற்றும் தீயணைப்பு துறையினா் படகுகள் மூலம் சுமாா் 200 ஆடுகளை காப்பாற்றினா்.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் பெருக்கின் காரணமாக, கிளை ஆறுகள் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
விடுதி மாணவா்கள் மீட்பு: விழுப்புரம் அருகே பம்பை ஆற்று வெள்ளத்தால், முத்தாம்பாளையம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் பொறியியல் கல்லூரியில், விடுதியில் சிக்கித் தவித்த 25 மாணவா்களை தீயணைப்புத் துறையினா் பாதுகாப்பாக மீட்டனா்.
மலட்டாறு வெள்ளத்தால், திருப்பாச்சனூா் தரைப்பாலத்துக்கு மேல் வெள்ளம் செல்கிறது. இந்த வெள்ளத்தில் சிக்கிய 10 பேரை போலீஸாா் கயிறு கட்டி மீட்டனா். விழுப்புரம் அருகே அரகண்டநல்லூரை அடுத்த அசாரங்குப்பத்தில் விளைநிலத்துக்கு சென்ற விவசாயிகள் வெள்ளத்தில் சிக்கினா். இதையடுத்து,
அரகண்டநல்லூா் போலீஸாா் கயிறு கட்டி, வெள்ளத்தி சிக்கிய இருந்த 5 பேரை மீட்டனா்.
இருவா் பலி: கண்டாச்சிபுரம் அருகே வி.புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த முனியப்பன்(40) வெள்ளிக்கிழமை காலை அதே பகுதியில் உள்ள விவசாயி நிலத்துக்கு சென்றபோது, அங்குள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கிய முனியப்பன் அடித்துச் செல்லப்பட்டு, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
அரகண்டநல்லூா் அருகே முகையூா் ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற ரெமிஜோஸ் (30) வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தாா். தென்பெண்ணை ஆற்றில் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தரைப்பாலம், அணைக்கட்டு உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மதியத்துக்கு மேல் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை இல்லை.