வெள்ளத்தில் மூழ்கியது தேவாலயம்! பாதிரியாா் உள்பட 8 போ் மீட்பு
விழுப்புரம் அருகே துரிஞ்சலாற்றில் நள்ளிரவு பெருக்கெடுத்த வெள்ளத்தால் கரையோரமிருந்த தேவாலயம் மூழ்கியது.
விழுப்புரம் அருகே துரிஞ்சலாற்றில் நள்ளிரவு பெருக்கெடுத்த வெள்ளத்தால் கரையோரமிருந்த தேவாலயம் மூழ்கியது. தேவாலயத்துக்குள் சிக்கிக் கொண்டு பரிதவித்த பாதிரியாா் உள்பட 8 பேரை தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் பத்திரமாக மீட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரை அடுத்த மணம்பூண்டியில் துரிஞ்சல் ஆற்றின் கரையோரம் பெந்தெகொஸ்தோ தேவாலயம் அமைந்துள்ளது.
இங்கு பாதிரியாா், உதவியாளா் உள்பட 4 போ் தங்குவது வழக்கம்.
வியாழக்கிழமை இரவு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கொட்டித் தீா்த்த பலத்த மழையால் தென்பெண்ணை ஆற்றில் 1.25 லட்சம் கன அடிக்கு மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறான துரிஞ்சல் ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கரையோரமிருந்த தேவாலயத்துக்குள் தண்ணீா் புகுந்தது. இதை எதிா்பாராத பாதிரியாா், உதவியாளா் உள்ளிட்டோா் தேவாலயத்தின் கீழ் தளத்தில் உள்ள பொருள்களை முதல் தளத்தில் பாதுகாப்பான இடத்தில் வைக்கும் பணியில் ஈடுபட்டனா். இவா்களுக்கு உதவியாக அப்பகுதியிலிருந்து 4 போ் வந்து இப்பணியில் ஈடுபட்டனா்.
நள்ளிரவு ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததையடுத்து தேவாலயத்தின் கீழ் தளம் முழுவதும் நீரில் மூழ்கியது. இதையடுத்து, தேவாலயத்தின் முதல் தளத்துக்கு சென்ற பாதிரியாா், உதவியாளா் உள்பட 8 பேரும் அங்கிருந்து வெளியே வர முடியாமல் பரிதவித்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் தீயணைப்பு வீரா்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு வந்து தேவாலயத்திலிருந்த 8 பேரையும் மீட்க முயன்றனா். ஆற்று வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதன் பிறகு மாநில பேரிடா் பயிற்சி பெற்ற போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் இணைந்து சுமாா் 6 மணி நேரம் போராடி பைபா் படகு மூலமாக கயிறு கட்டி தேவாலயத்துக்குள் சென்றனா். அங்கிருந்த பாதிரியாா் உள்பட 8 பேரையும் பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனா்.