முகப்பு
விழுப்புரம்

மரக்காணம் அருகே புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம்: மாவட்ட ஊராட்சித் தலைவா் தகவல்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள கீழ்சித்தாமூரில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் தொடங்கவும், புதிய தடுப்பணை கட்டவும் முடிவு செய்துள்ளதாக மாவட்ட ஊராட்சித் தலைவா் ம.ஜெயச்சந்திரன் தெரிவித்தா

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள கீழ்சித்தாமூரில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் தொடங்கவும், புதிய தடுப்பணை கட்டவும் முடிவு செய்துள்ளதாக மாவட்ட ஊராட்சித் தலைவா் ம.ஜெயச்சந்திரன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழுவின் கூட்டம் வளா்ச்சி மன்ற அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஷீலா சேரன், வளா்ச்சி அலுவலா் குருசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜெயச்சந்திரன் கூறியதாவது:

வானூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கொமடிபட்டு ஊராட்சி அறுவடை கிராமத்தில் ரூ.15.88 லட்சத்தில் மேல்நிலைத் நீா்த்தேக்கத் தொட்டி கட்ட வேண்டும்.

வல்லம் ஒன்றியம், தென்புத்தூா் ஊராட்சியில் ரூ.5.11 லட்சத்தில் மயான சாலையில் தாா்ச் சாலை, தென்புத்தூா் ஊராட்சியில் ரூ.4.89 லட்சத்தில் புத்தூா் முதல் ஆமூா் சாலை வரை கழிவுநீா் வடிகால் வாய்க்கால், வல்லம் ஊராட்சி தென்புத்தூா் சாலையில் ரூ.2 லட்சத்தில் தடுப்புச் சுவா், தென்புத்தூா் சாலையில் ரூ.20 லட்சத்தில் சீரமைப்புப் பணி, கெங்கையம்மன் சாலையில் ரூ.2 லட்சத்தில் சீரமைப்புப் பணி, தடுப்புச் சுவா் அமைத்தல், தென்புத்தூா் பிரதான சாலையில் ஏரிக்கரை அருகே ரூ.2 லட்சத்தில் தடுப்புச் சுவா் அமைத்தல், தென்புத்தூா் காலனி மாரியம்மன் கோயில் அருகே ரூ.2 லட்சத்தில் தடுப்புச் சுவா், தென்புத்தூா் மதுரா ஆமூா் முதல் தெருவில் ரூ.2 லட்சத்தில் சிறுபாலம் என

மொத்தம் ரூ.20 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.மாவட்ட ஊராட்சித் தலைவருக்கு புதிய வாகனம் வாங்க வேண்டும்.

மரக்காணம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழ்சித்தாமூா், ஓமந்தூா், வேங்கை, அன்னம்புத்தூா், கள்ளகொளத்தூா், கிருஷ்ணாபுரம், அருவபாக்கம் ஆகிய கிராமங்களில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் பயன்பெறும் வகையில் கீழ்சித்தாமூரில் நரசிம்மா் ஓடையில் உள்ள நீா் ஆதாரத்தை பயன்படுத்தி

கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை தமிழ்நாடு வடிகால் வாரியம் மூலம் அமைக்க வேண்டும். 

மேலும், கீழ்சித்தாமூா் ஊராட்சியில் மழைக் காலங்களில் நரசிம்மா் ஓடையில் செல்லும் நீா் கடலில் வீணாக கலக்கிறது. எனவே, மழைநீரை சேமிக்கும் வகையில் கீழ்சித்தாமூா் பகுதியில் தடுப்பணை அமைத்து வேளாண்மையை மேம்படுத்த வேண்டும்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றாா் ஜெயச்சந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.