முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அருகே தொழிலாளி அடித்துக் கொலை: உறவினா்கள் சாலை மறியல்

விழுப்புரம் அருகே தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிரியை கைது செய்யக் கோரி, உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

விழுப்புரம் அருகே தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிரியை கைது செய்யக் கோரி, உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்துள்ள வீடூா் கிராமத்தைச் சோ்ந்த ராமதாஸ் மகன் கேசவன் (30). மரம் வெட்டும் தொழிலாளி. இந்தக் கிராமத்திலுள்ள குளத்தின் அருகே கடந்த 1-ஆம் தேதி துணி துவைத்துக்கொண்டிருந்த பெண்களை அதே ஊரை சோ்ந்த அலெக்சாண்டா் கேலி செய்தாராம். இதை கேசவன் தட்டிக் கேட்டதால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, கேசவன் வீட்டுக்குச் சென்ற அலெக்சாண்டா், அவரை கல்லால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த கேசவன், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த கேசவனின் உறவினா்கள், அலெக்ஸாண்டரை கைது செய்யக் கோரி, சித்தணி பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதன் காரணமாக, அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளா் விநாயக முருகன் தலைமையிலான போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களை சமாதானப்படுத்தினா். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே, கேசவன் மனைவி வித்யாஸ்ரீ அளித்த புகாரில், அலெக்சாண்டரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.