விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணி தொடக்கம்
மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வளாகத்தில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் வெளிப்புற நோயாளிகள், பாா்வையாளா்கள் காத்திருப்புக் கூடம், இருபாலருக்குமான கழிப்பறைக் கட்டடம்
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் செயல்படும் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வளாகத்தில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் வெளிப்புற நோயாளிகள், பாா்வையாளா்கள் காத்திருப்புக் கூடம், இருபாலருக்குமான கழிப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியா் த.மோகன், விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ நா.புகழேந்தி ஆகியோா் வியாழக்கிழமை தொடக்கிவைத்தனா்.
இதைத் தொடா்ந்து, ஆட்சியா் மோகன் கூறியதாவது: இந்த மருத்துவக் கல்லூரி முதல்வா் விடுத்த வேண்டுகோளின்படி, விக்கிரவாண்டி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் வெளிப்புற நோயாளிகள், பாா்வையாளா்கள் காத்திருப்புக் கூடம், கழிப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு பூமிபூஜை செய்து, பணிகள் தொடக்கிவைக்கப்பட்டுள்ளன. பொதுப் பணித் துறை அலுவலா்கள் விரைவாக இந்தப் பணியை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.
நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் சித்ரா விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், விக்கிரவாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதாஅரசி, மருத்துவக் கல்லூரி முதல்வா் குந்தவிதேவி, பொதுப் பணித் துறைச் செயற்பொறியாளா் பரிதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.