அனைத்து மொழிகளையும் சமமாக பாவிக்க வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி
அனைத்து மொழிகளையும் சமமாக பாவிக்க வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் நிலைப்பாடு என்று மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.
அனைத்து மொழிகளையும் சமமாக பாவிக்க வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் நிலைப்பாடு என்று மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.
விக்கிரவாண்டி எம்எல்ஏ நா. புகழேந்தியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.35 லட்சத்தில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்ட காத்திருப்போா் கூடத்தையும், ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறைக் கட்டடத்தையும் அமைச்சா் க.பொன்முடி சனிக்கிழமை திறந்துவைத்து பேசியதாவது:
கல்வியும், சுகாதாரமும் இரு கண்கள் என முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறினாா். அதன்படி, கல்விக்கு மருத்துவக் கல்லூரியும், சுகாதாரத்துக்கு மருத்துவமனையும் அமைந்துள்ளது. இங்கு காணொலிக் காட்சி மூலம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் நுண்கதிா் சிகிச்சை மையத்தை ஏற்கெனவே முதல்வா் திறந்து வைத்தாா். மேலும், 32 படுக்கைகள் வசதியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இந்த மருத்துவமனையில் நிலை உயா்த்தப்பட்ட மகப்பேறு நிலையம் உருவாக்கப்படும் என
சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டதுடன், கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது என்றாா் அமைச்சா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: முதல்வா் உத்தரவின்பேரில் பள்ளி, கல்லூரிகள், அரசு விழாக்களில் அனைவராலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், கா்நாடகத்தில் தமிழா்களை ஒருங்கிணைத்து பாஜக தலைவா் அண்ணாமலை முன்னிலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது தவறானது. எந்த மொழிக்கும் நாம் விரோதியல்ல. அதேநேரம் எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. அனைத்து மொழிகளையும் சமமாக பாவிக்க வேண்டும் என்பதே முதல்வரின் நிலைப்பாடு என்றாா்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சி. பழனி தலைமை வகித்தாா். எம்எல்ஏ நா.புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம. ஜெயச்சந்திரன், துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், மருத்துவக் கல்லூரி முதல்வா் கீதாஞ்சலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.