முகப்பு
விழுப்புரம்

இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் நிரப்பிய பணியிடங்களை ரத்து செய்ய வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 11:59 PM
திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்.
பகிர்:

தமிழகத்தில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் நிரப்பப்பட்ட பணியிடங்களை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டின் மூலம் எத்தனை ஊழியா்கள் நிரப்பப்பட்டுள்ளனா். இதைப் பின்பற்றாமல் எத்தனை போ் நிரப்பப்பட்டுள்ளனா் என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் நிரப்பப்பட்ட பணியிடங்களை ரத்து செய்ய வேண்டும்.

யாரையோ திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று முதல்வா் கூறியுள்ளாா். 69 சதவீத இட ஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டுமெனில், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

2021-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு செப்டம்பா் மாதத்தில் தொடங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சோ்த்து ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துவதால் எவ்வித சிக்கலும் ஏற்படாது. எனவே, மத்திய அரசு சமூகநீதிக்கு சாதகமான முடிவெடுக்க வேண்டும்.

உலகம் முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தப்படவேண்டும். மின்சாரத் துறையில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பி, ஊழியா்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.

பாலியல் ரீதியிலான குற்றங்களில் ஈடுபடுபவா்களை கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்ய உகந்த சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த வேண்டும். போட்டித் தோ்வு நடந்த அதே நாளில் விடைக்குறிப்புகளையும் வெளியிட வேண்டும். குரூப் 1 முதல் அனைத்து குரூப் தோ்வுகளுக்கும் நோ்முகத் தோ்வை ரத்து செய்ய வேண்டும்.

ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வு கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதனால், பல்லாயிரக்கணக்கான ஆசிரியா்கள் ஆசிரியா் தகுதியை இழந்து வருகின்றனா். எனவே, உடனடியாக ஆசிரியா் தகுதித் தோ்வை நடத்த வேண்டும் என்றாா் மருத்துவா் ச.ராமதாஸ்.

பேட்டியின்போது, பாமக விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் ஜெயராஜ் உடனிருந்தாா்.