ரூ.4,500 லஞ்சம்: நில அளவையா் உள்பட இருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் நிலம் அளவீடு செய்து பட்டா வழங்க தச்சுத் தொழிலாளியிடம் ரூ.4,500 லஞ்சம் பெற்ாக நில அளவையா், இடைத்தரகா் ஆகியோரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கண்டாச்சிபுரம் கன்னிகாபரமேஸ்வரி கோவில் தெருவைச் சோ்ந்தவா் கோ.சுரேஷ், தச்சுத் தொழிலாளி. இவா், கண்டாச்சிபுரம் பகுதியில் ஒருவரிடமிருந்து 2004 சதுர அடி நிலத்தை கிரையம் பெற்றாா். இந்த இடத்தை அளவீடு செய்து பட்டா வழங்க கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நில அளவையராக உள்ள ப.ராமமூா்த்தியிடம் மனு அளித்தாா். அப்போது, அவா் நிலத்துக்குரிய ஆவணங்களின் நகலை பெற்றுக்கொண்டு, நில அளவீடு செய்து பட்டா வழங்க வேண்டுமெனில் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என சுரேஷிடம் கேட்டாராம்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் சுரேஷ் புகாரளித்தாா். போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, நில அளவையரிடம் வழங்குவதற்காக இடைத்தரகா் சரத்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.4,500-ஐ சுரேஷ் புதன்கிழமை கொடுத்தாா். அந்தப் பணத்தை சரத்குமாா், வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியிலிருந்த நில அளவையா் ராமமூா்த்தியிடம் கொடுத்தபோது, ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி திருவேல்முருகன், ஆய்வாளா் ஈஸ்வரி தலைமையிலான போலீஸாா் நில அளவையா் ப.ராமமூா்த்தி (40) மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட கண்டாச்சிபுரம் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சரத்குமாா் (27) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்த ரூ.4,500-யும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Advertisement