தொடர் பலத்த மழையால், மழைநீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்., புதுச்சேரி ரெயின்போ நகரில் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை வெள்ளம். 
விழுப்புரம்

விழுப்புரம், புதுச்சேரியில் வரலாறு காணாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்புகள்

ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு கரையைக் கடந்த நிலையில், விழுப்புரம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இடைவிடாமல் வரலாறு காணாத மழை பெய்தது.

DIN

ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு கரையைக் கடந்த நிலையில், விழுப்புரம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இடைவிடாமல் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடக்கத் தொடங்கியது. புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை கனமழை பெய்தது.

அதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இடைவிடாமல் பெய்தது. இதனால், மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொடர் மழையால் குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களில் குடியிருப்புகள் மழைநீரால் சூழப்பட்டன. திண்டிவனத்தில் கிடங்கல்- 2 ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இத்துடன் தொடர் மழையால் நாகலாபுரம் குளத் தெருவில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடானது. இந்திராநகர், வகாப்புநகர் பகுதிகளில் 500 வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதேபோன்று, செஞ்சி நகரிலும் மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

5,513 கால்நடைகள் இறப்பு: கோட்டக்குப்பம் நகராட்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் 3 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வானூர் வட்டம், சுனாமி குடியிருப்பு ஜமீத் நகரில் வெள்ளம் சூழ்ந்ததால் 13 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் ரப்பர் படகு மூலம் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக மாவட்டம் முழுவதும் ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்தன. தொடர் மழையால் விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட பிற நகரங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை 5,513 கால்நடைகள் இறந்துள்ளன. 11 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பொதுமக்களை தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர். இதையடுத்து, அவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகின்றன.

மரக்காணம், கோட்டக்குப்பம் உள்பட மாவட்டம் முழுவதும் 34 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 1,881 பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழைநீரால் பெரிதும் பாதிக்கப்பட்ட 66 பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மயிலத்தில் அதிகபட்சமாக 500 மி.மீ. மழை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக திண்டிவனத்தில் 370 மி.மீ., விழுப்புரத்தில் 270, செஞ்சி 250, விக்கிரவாண்டி, வானூர் தலா 240, மேல்மலையனூரில் 220 மி.மீ. மழை பதிவானது.

துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் முகாம்: மழை பாதித்த திண்டிவனம், மரக்காணம், விழுப்புரம் பகுதிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வனத் துறை அமைச்சர் க.பொன்முடி, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தினர்.

புதுச்சேரியில்...: புதுச்சேரியில் சனிக்கிழமை தொடங்கி விடிய விடிய பெய்த பலத்த மழையால் நகரில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சங்கராபரணி ஆறு, உப்பனாறு மற்றும் முக்கிய கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ரெயின்போநகர், கிருஷ்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பல அடி உயரத்துக்கு தேங்கியது. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நகரம் இருளில் மூழ்கியது.

4 பேர் உயிரிழப்பு: மழை வெள்ளத்தில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் புதுச்சேரியில் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர்.

சந்தைக்குப்பம் சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சந்தைக்குப்பம்பேட்டை பகுதியில் கர்ப்பிணி உள்பட 74 பேர் வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.

புதுச்சேரி - விழுப்புரம் - திண்டிவனம் சாலை துண்டிக்கப்பட்டதால், அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. புயல், மழையால் 1,500 ஏக்கரிலான நெற்பயிர்கள் சேதமடைந்தன./

மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் ராணுவத்தினரும் இணைந்து செயல்பட்டனர். மழைநீர் தேங்கி நின்ற பகுதிகளில் அவர்கள் பொதுமக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

புதுச்சேரியில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 500 மி.மீ. மழை பதிவானது.

புதுச்சேரியில் புயல் பாதிப்பு, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கணக்கிட்டு, மத்திய அரசுக்கு நிவாரண உதவி கோரி கடிதம் அனுப்பிவைக்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார். வெள்ளம் பாதித்த கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளை புதுவை துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: தொடர் மழையால் புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (டிச. 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT