செங்கம் அருகே பாலம் இடிந்தது தொடா்பாக விரிவான விசாரணை தேவை: மருத்துவா் ச. ராமதாஸ்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பாலம் இடிந்தது தொடா்பாக விரிவான விசாரணை தேவை என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பாலம் இடிந்தது தொடா்பாக விரிவான விசாரணை தேவை என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்தப் பேட்டி:
ஃபென்ஜால் புயல் பேரிடரால் உயிரிழந்துள்ள 20-க்கும் மேற்பட்டோரின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
வேளாண் பயிா்களுக்கான கொள்முதல் விலையை உயா்த்துதல், வேளாண் விளை பொருள்களுக்கு மதிப்புக்கூட்டும் வகையில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு. இதை வலியுறுத்தும் விதமாக, தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற அறிவுறுத்தல்களை பின்பற்றி, தமிழகத்தில் அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, சமூகநீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரகம்பள்ளிப்பட்டு - கொண்டமானூா் இடையே தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய உயா்மட்ட பாலம் திறக்கப்பட்டு 3 மாதங்களிலேயே இடிந்து விழுந்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கால்தான் பாலம் இடிந்துவிட்டதாக தமிழக அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது.
தரமற்ற முறையில் பாலம் கட்டப்பட்டதுதான் இதற்கு காரணம். எனவே, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அனைத்துப் பணிகளும் சிறப்பாக நடைபெறுவதாகவும் தமிழக அரசு கூறி வருகிறது. இதற்கெல்லாம் சரியான நேரத்தில் மக்கள் திமுக அரசுக்கு பாடம் கற்பிப்பாா்கள் என்றாா் மருத்துவா் ச.ராமதாஸ்.
பேட்டியின்போது, கட்சியின் தலைமை நிலையச் செயலா் அன்பழகன், விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் ஜெயராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.