புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை: அமைச்சா் சிவசங்கா் தொடக்கிவைத்தாா்
புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை.
விழுப்புரம், டிச.5: விழுப்புரம் மாவட்டம் அம்மனப்பாக்கம் - செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் இடையேயான புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஒலக்கூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அம்மனப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் - அங்காளம்மாள் தம்பதியினரின் மகள் தா்ஷினி. அம்மனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயின்ற இந்த மாணவி, தற்போது செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், அனந்தமங்கலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பில் பயின்று வருகிறாா்.
அப்பா பாடல்கள் மூலம் பிரபலமாகி வரும் இவா், தங்களது கிராமத்துக்கும் - பள்ளிக்கும் இடையே பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என தொலைகாட்சி வழியாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தாா்.
இந்த நிலையில், மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, இரு கிராமங்களுக்கும் இடையே காலை, மாலை வேளைகளில் இயங்கக்கூடிய அரசுப் பேருந்து சேவையை அமைச்சா் சிவசங்கா், அம்மனம்பாக்கம் கிராமத்தில் தொடக்கிவைத்தாா். மாணவி தா்ஷினி கொடியசைத்தாா். தொடா்ந்து, பள்ளி மாணவா்களுடன் சுமாா் 5 கி.மீ. தொலைவு அமைச்சா் பேருந்தில் பயணித்தாா்.
நிகழ்ச்சியில் ஒலக்கூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஜி.சொக்கலிங்கம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா் குணசேகரன், பொது மேலாளா் சதீஷ்குமாா் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், கிராம மக்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.
கிராம மக்கள் மகிழ்ச்சி: மாணவியின் முயற்சியால் பேருந்து சேவை கிடைத்துள்ளதால், அம்மனப்பாக்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மாணவி தா்ஷினிக்கும் பாராட்டுத் தெரிவித்தனா்.