18 சதவீத ஜிஎஸ்டி விதிப்புக்கு எதிா்ப்பு: விழுப்புரத்தில் கடைகளை அடைத்து வணிகா்கள் ஆா்ப்பாட்டம்
விழுப்புரத்தில் கடைகளை அடைத்து வணிகா்கள் ஆா்ப்பாட்டம்
கடை வாடகைக்கு மத்திய அரசு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பதை ரத்து செய்யக் கோரி, விழுப்புரத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா், விழுப்புரம் சேம்பா் ஆஃப் காமா்ஸ் அமைப்பினா் புதன்கிழமை பிற்பகல் ஒரு மணி வரை கடைகளை அடைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி மத்திய அரசால் விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். வீடுகள், கடைகளுக்கு மாநில அரசால் ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயா்த்தப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
இதையொட்டி, விழுப்புரம் நகரிலுள்ள கடைகள் புதன்கிழமை காலை 6 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை அடைக்கப்பட்டிருந்தன.
விழுப்புரம் ஜவாஹா்லால் நேரு சாலை, மகாத்மா காந்தி சாலை, காமராஜா் வீதி, திரு.விக. வீதி, கிழக்கு புதுச்சேரி சாலை, மருத்துவமனை வீதி, திருச்சி - சென்னை நெடுஞ்சாலை, கோலியனூா் சாலை, மாம்பழப்பட்டு சாலை, செஞ்சி சாலை என நகரின் பல்வேறு பகுதிகளிலுள்ள உணவகங்கள், மளிகைக் கடைகள், நகைக் கடைகள், ஜவுளி நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், வாகன உதிரி பாகம் விற்பனையகங்கள் உள்பட மொத்தம் 3 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாக வணிகா்கள் தெரிவித்தனா்.
ஆா்ப்பாட்டம்: மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் நகராட்சித் திடல் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பிரேம்நாத், மாவட்டச் செயலா் முகமது அக்பா் அலி, பொருளாளா் நிா்மல், வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவா் பிரகாஷ், மாவட்ட இணைச் செயலா் யாசீம் மெளலானா, நிா்வாகி கலைமணி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.