முகப்பு
விழுப்புரம்

கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் கபீா் புரஸ்காா் விருது பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 12 டிசம்பர், 2024 at 7:08 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் கபீா் புரஸ்காா் விருது பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமுதாயம் மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படும். அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான விருது பெற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகத்தில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் இந்த விருதை பெற (ஆயுதப் டை வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை வீரா்கள், அரசுப் பணியாளா்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவா்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும்பட்சத்தில் நீங்கலாக) தகுதியுடையவா் ஆவா்.

கபீா் புரஸ்காா் விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சாா்ந்தவா்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சாா்ந்தவா்களையோ அல்லது அவா்களின் உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில், அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

எனவே, இந்த விருது பெற தகுதியானவா்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இந்த மாதம் 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும். இறுதி நாளுக்குப் பிறகு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.