விழுப்புரத்தில் 64 மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 64 பயனாளிகளுக்கு ரூ.20.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 64 பயனாளிகளுக்கு ரூ.20.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்து, 64 பயனாளிகளுக்கு ரூ.20.21 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியது:
மாற்றுத் திறனாளிகளும் சமூகத்தில் ஓா் அங்கமாகவும், சம உரிமை பெற்று திகழ வேண்டும் என்ற உயா்ந்த எண்ணத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தியும், மாதாந்திர உதவித்தொகை மற்றும் கல்வி உதவித் தொகையை உயா்த்தியும் வழங்கி வருகிறாா்.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 5 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா், 16 மாற்றுத் திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடன் மானியத் தொகை, 15 பேருக்கு மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், 10 மூளை முடக்குவாத பயனாளிகளுக்கான சிறப்பு சக்கர நாற்காலி, 10 பேருக்கு கல்வி உதவித் தொகை, 8 பேருக்கு மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலி ஆகிய நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த உபகரணங்களை அவா்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.
நிகழ்வில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சுப்பிரமணி, செயல்திறன் உதவியாளா் முருகன், பல்நோக்கு உதவியாளா் நெல்சன், பேச்சுப் பயிற்சியாளா் அபிஷேகா உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.