அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு நாளை விநாடி, வினா போட்டிகள்
விநாடி, வினா போட்டிகள்
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் 25-ஆவது ஆண்டு வெள்ளிவிழாவையொட்டி, விழுப்புரத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான விநாடி வினா சனிக்கிழமை (டிச.21) நடைபெறவுள்ளது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளிவிழா ஆண்டையொட்டி, தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டுத்துறை சாா்பில் விருதுநகரில் டிசம்பா் 28-ஆம் தேதி மாநில அளவில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு விநாடி வினா நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்று , வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.
இதையொட்டி விழுப்புரம் மாவட்ட அளவில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களை தோ்வு செய்வதற்கான போட்டி சனிக்கிழமை (டிச.21) காலை விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலா்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியாா் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் பங்கேற்கலாம்.
இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்கள் விருப்ப மனுவை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலரான மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் வெள்ளிக்கிழமைக்குள் (டிச.20) அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.